கரும்பு, கொய்யா, நெல் பயிர்களை அழித்து சாலை விரிவாக்க பணி? விவசாயிகள் வேதனை

பண்ருட்டி : பண்ருட்டி அருகே தொரப்பாடி இடத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடந்து வரும் நிலையில், அதில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு, கொய்யா, நெல் போன்ற பயிர்கள் அறுவடை செய்வதற்காக காலக்கெடு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் முன்னறிவிப்பின்றி நேற்று முன்தினம் திடீரென சென்ற நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தொரப்பாடியில் அய்யனார் என்பவரது விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான கரும்பு, கொய்யா, நெல் பயிர்களை அழித்து சேதப்படுத்தினர்.

இதனை விவசாயிகள் எவ்வளவோ போராடி தடுத்தும் கண்டுகொள்ளாத அதிகாரிகள் அலட்சியம் காட்டி பயிர்களை அழித்து சமன்படுத்தி சாலை போட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
தங்கள் கண்ணெதிரே விவசாய பயிர்களை அழிப்பதை கண்டு விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறினர். தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post கரும்பு, கொய்யா, நெல் பயிர்களை அழித்து சாலை விரிவாக்க பணி? விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Related Stories: