இம்மாதிரி ஒரு தலைவர் மீண்டும் கிடைப்பது அரிது: காயிதே மில்லத்தின் 128வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: காயிதே மில்லத்தின் 128வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் அவர்களின் 128 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னாரின் நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு; கல்லூரிப் படிப்பைக் கைவிட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைசிறந்த நாட்டுப்பற்றாளர்.

ஆட்சிமொழிப் பிரச்சினையில், தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும் என அரசியல் நிர்ணய அவையில் ஆணித்தரமாக வாதாடிய மொழிக்காவலர். தொகுதிக்குச் செல்லாமலேயே போட்டியிட்ட தேர்தல்களில் எல்லாம் வெற்றிபெறக் கூடிய அளவுக்குச் செல்வாக்கு கொண்டிருந்த தனிப்பெரும் தலைவர். அரசியல் நிர்ணய அவை உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் தமிழர்களுக்காகவும் சிறுபான்மைச் சமுதாயத்தினரின் உரிமைகளுக்காகவும் உரக்கக் குரல் எழுப்பிய அரிமா.

“இவ்வளவு பெரிய முஸ்லிம் சமுதாயத்திற்கு இம்மாதிரி ஒரு தலைவர் மீண்டும் கிடைப்பது அரிது” என்று அவரது மறைவின்போது தந்தை பெரியாரால் உருக்கத்துடன் பாராட்டப்பட்ட மாசற்ற மாணிக்கம் – கண்ணியமிகு ‘காயிதே மில்லத்’ முகம்மது இஸ்மாயில் அவர்களின் பிறந்தநாளில் இந்நாட்டுக்காக அவர் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்புகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.

The post இம்மாதிரி ஒரு தலைவர் மீண்டும் கிடைப்பது அரிது: காயிதே மில்லத்தின் 128வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: