திருவெண்ணெய்நல்லூர், ஜூன் 5: திருவெண்ணெய்நல்லூர் அடுத்த இருவேல்பட்டு அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பைக் மீது லாரி மோதியதில் மாணவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருச்சி மணச்சநல்லூரை சேர்ந்த ராஜா மகன் ராகுல் (19), மயிலாடுதுறை கிளியனூரை சேர்ந்த ஷேக் அசாருதீன் மகன் சபிக்(19) ஆகிய இருவரும் திருச்சி எஸ்.ஆர்.எம் கல்லூரியில் பி.காம் படித்து வந்தனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் நேற்று விழுப்புரத்திலிருந்து திருச்சிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தபோது திருவெண்ணெய்நல்லூர் அடுத்த இருவேல்பட்டு அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசு விதைப்பண்ணை அருகே, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை முந்தி செல்ல முயற்சித்தபோது லாரியின் பக்கவாட்டில் மோதி சாலையில் விழுந்தனர்.
எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த லாரியில் சிக்கி உடல் நசுங்கி ராகுல் மற்றும் சபிக் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருவெண்ணெய்நல்லூர் அருகே பைக் மீது லாரி மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி appeared first on Dinakaran.