ஒடிசா ரயில் விபத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்

 

சிதம்பரம், ஜூன் 5: ஒடிசா ரயில் விபத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என சிதம்பரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் எல்.இளையபெருமாள் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடத்தப்படவுள்ளது. இவரது சமூக பணியை அறிந்து தமிழக முதல்வர் அவருக்கு சிதம்பரத்தில் நினைவு சின்னம் அமைக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அகில இந்திய அளவில் தீண்டாமை ஒழிப்பு கமிட்டி தலைவராக இருந்து சிறப்பான அறிக்கையை எல்.இளையபெருமாள் தாக்கல் செய்தார். ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்காக பாடுபட்டவர்.

அவரது நூற்றாண்டு விழாவுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களை அழைத்து வர முடிவு செய்துள்ளோம். இந்த நூற்றாண்டு மிகப்பெரிய விபத்து ஒடிசா ரயில் விபத்தாகும்.மோசமான நிர்வாகத்தால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குற்றம் நடந்துள்ளது தவறு நடந்துள்ளது என்பதால், குற்றம் செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் கூறியுள்ளார். இது இயல்பான விபத்தல்ல நிர்வாக கோளாறினால் ஏற்பட்ட விபத்து. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். நவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த காலத்தில் இது போல் விபத்துக்கள நடக்காமல் இருந்திருக்க வேண்டும் என்றார்.

முன்னதாக கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மறைந்த தலைவர் எல்.இளையபெருமாள் நூற்றாண்டு விழா குறித்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். நகர தலைவர் தில்லை மக்கீன் வரவேற்றார். மாநில செயலாளர் சித்தார்த்தன், சேரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெமின் ராதா, மாவட்ட துணைத் தலைவர் ராஜாசம்பத்குமார், ஜோதிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் செந்தில்வேலன், விவசாய சங்கத் தலைவர் இளங்கீரன், வட்டாரத் தலைவர் சுந்தரராஜன், மகளிரணி தில்லை செல்வி, ஜனகம், மாலா உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

The post ஒடிசா ரயில் விபத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: