மெரினாவில் காதலனுடன் இருந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு போதை கும்பலை தனியாக போராடி விரட்டியடித்த பெண் போலீஸ்

சென்னை: மெரினா கடற்கரைக்கு வந்த காதல் ஜோடியை வாகனத்தால் இடித்து கீழே தள்ளி, காப்பாற்றுவது போல் நடித்து இளம் பெண்ணை, போதையில் இருந்த 4 ரவுடிகள் பாலியல் தொந்தரவு செய்து செல்போன் பறித்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர், தனி நபராக 4 ரவுடிகளிடம் போராடி இளம் பெண்ணை மீட்டு, விரட்டியடித்தார். பின்னர் அவர் கொடுத்த தகவலின்படி 4 ரவுடிகளை போலீசார் கைது ெசய்தனர். துணிச்சலுடன் நான்கு ரவுடிகளிடம் போராடி காதல் ஜோடியை மீட்ட பெண் போலீசுக்கு சோஷியல் மீடியாவில் பாராட்டு குவிந்து வருகிறது. சென்னை மெரினா கடற்கரைக்கு வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது குடும்பங்களுடன் வருவது வழக்கம்.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை காதல் ஜோடி ஒன்று மெரினா கடற்கரைக்கு பைக்கில் வந்தனர். அந்த வழியாக பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே உள்ள சர்வீஸ் சாலையில் அசுர வேகத்தில் 2 பைக்கில் மின்னல் வேகத்தில் வந்த 4 பேர், காதல் ஜோடி ஓட்டி வந்த பைக் மீது மோதினர். இதில் நிலைகுலைந்த காதல் ஜோடி பைக்குடன் கீழே விழுந்தனர். உடனே ரவுடி கும்பல் காதல் ேஜாடியிடம் தகராறு ெசய்தது. இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தும், அவரிடம் இருந்து செல்போனை பறித்து கொண்டு தப்பி செல்லவும் முயன்றனர். ரவுடி கும்பலின் அட்டகாசம் மற்றும் பாலியல் தொல்லையால் அந்த பெண் கதறி அழுதார். இவற்றை பார்த்தும் அங்கிருந்த சிலர் ரவுடிகளை தட்டி கேட்காமல் அமைதி காத்தனர்.

இது ரவுடிகளுக்கு சாதகமாக போய்விட்டது. அப்போது அவரின் அலறலை கேட்டு, மெரினா கடற்கரை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை பெண் காவலர் கலா என்பவர் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தார். பெண் காவலர் வருவதை பார்த்த 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால், பெண் காவலர் தனி நபராக 4 பேரையும் மடக்கினார். பெண் காவலரை போதை ஆசாமிகள் 4 பேரும் ஆபாசமாக பேசியதுடன் அவரை தாக்க முயன்றனர். மேலும் கொலை மிரட்டல் விடுத்து, 2 பைக்கில் அங்கிருந்து தப்பி ஓடினர். போதை ஆசாமிகள் தப்பி சென்ற பைக் பதிவு எண்களுடன், உடனே அண்ணாசதுக்கம் போலீசுக்கு பெண் காவலர் கலா தகவல் அளித்தார். பிறகு பாதிக்கப்பட்ட இளம் பெண் மற்றும் அவரது காதலனை பெண் காவலர் சமாதானம் செய்து வைத்து, அண்ணாசதுக்கம் காவல் நிலையத்திற்கு பத்திரமாக அனுப்பி வைத்தார்.

அண்ணாசதுக்கம் போலீசார் மெரினா பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை எடுத்து விசாரணை நடத்தினர். அதில், அந்த ரவுடிகள் திருவல்லிக்கேணி வால்டாக்ஸ் சாலையை சேர்ந்த, கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய உதயகுமார், தமிழரசன், வசந்தகுமார், சோமசுந்தரம் என தெரியவந்தது. அவர்களை போலீசார் பிடித்தனர். பின்னர் போலீசார் 4 பேரிடம் நடத்திய விசாரணையில், மாலை நேரங்களில் கஞ்சா போதையில் பைக்குகளில் சென்று மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் பொதுமக்கள் மீது மோதிவிட்டு, அவர்களிடம் வாகனத்தை நீங்கள் தவறாக ஓட்டியதாக தகராறில் ஈடுபட்டு செல்போன் மற்றும் பணத்தை மிரட்டி பறித்து வந்தது தெரியவந்தது.

போலீசார் அதிரடியாக 4 ரவுடிகள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். வழிப்பறிக்கு பயன்படுத்திய 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. காதல் ஜோடியிடம் தவறாக நடந்து கொண்டு வழிப்பறியில் ஈடுபட்ட 4 ரவுடிகளை தனி நபராக தனது உயிரை பணயம் வைத்து போராடிய ஆயுதப்படை பெண் காவலர் கலாவை உயர் அதிகாரிகள் பாராட்டினர். மேலும், அப்போது அருகில் இருந்த பொதுமக்கள் சிலர் பெண் காவலரின் புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது துணிச்சலை பாராட்டி பதிவு செய்துள்ளனர்.

* ரவுடி கும்பலிடம் சிக்கி பாலியல் தொல்லைக்கு உள்ளான இளம்பெண் கதறி அழுதார். அப்போது அப்பகுதியில் பலர் இருந்தனர். எனினும் ரவுடிகளுக்கு பயந்து எதையும் செய்ய முடியாமல், வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் பெண்ணின் அலறலை கேட்டு மெரினா கடற்கரை பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் கலா அங்கு ஓடிவந்து ரவுடிகளை மடக்கி பிடித்தார்.

The post மெரினாவில் காதலனுடன் இருந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு போதை கும்பலை தனியாக போராடி விரட்டியடித்த பெண் போலீஸ் appeared first on Dinakaran.

Related Stories: