ஒன்றிய அரசின் அலட்சியமே ஒடிசா ரயில் விபத்துக்கு காரணம் இயங்குவது 13 ஆயிரம் இன்ஜின்கள் கவச் கருவி இருப்பது 65ல் மட்டுமே: மதுரை எம்.பி சு.வெங்கடேசன் காட்டம்

மதுரை: நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் 13 ஆயிரம் ரயில் என்ஜின்களில் வெறும் 65ல் மட்டுமே கவச் கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு ரயில் பயணிகளின் பாதுகாப்பை அலட்சியப்படுத்திவிட்டது என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று விடுத்துள்ள அறிக்கை: ஒடிசா ரயில் விபத்துக்கு சிக்னல் கோளாறு உள்ளிட்ட தொழில்நுட்ப பிரச்னையே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. 1998ல் ஏற்பட்ட விபத்துக்கு அன்றைய பிரதமர் வாஜ்பாய், நீதிபதி கண்ணா தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் நியமித்தார். அது பாரபட்சமற்ற விசாரணை நடத்தி தீர்ப்பு கூறியது. இப்போதும் நீதிபதியின் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து உண்மையை கண்டறிய வேண்டும்.

2017ல், சுரேஷ்பிரபு ரயில்வே அமைச்சராக இருந்தபோது ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட்டார். அதில், ரயில்வேயில் ஆண்டுதோறும் 4,500 கி.மீ தூரம் தண்டவாளம் பழுதடைகிறது. நாம் புதுப்பிப்பது 2 ஆயிரம் முதல் 2,500 கி,மீ. இது எப்போது வேண்டுமானாலும் விபத்துக்கு வழிவகுக்கும். சிக்னல் ஆண்டுதோறும் 200 ரயில்நிலையங்களில் பழுதடைகிறது. ஆனால், நூறுதான் புதுப்பிக்கப்படுகிறது என தெரிவித்திருந்தார். புதுப்பிக்கப்படாத 15 ஆயிரம் கி.மீ தண்டவாளம் பழுதடைந்து, எப்போதும் விபத்து ஏற்படலாம் என்ற நிலையுள்ளது. சிக்னல்கள் புதுப்பிக்கப்படாமல் உள்ளன. ரயில்கள் பாதுகாப்பாக ஓட ரயில்வேயும் ஒன்றிய அரசும் ஒரு அவசர உணர்வுடன் செயல்படவில்லை. இரு ரயில்கள் மோதுவதை தவிர்க்க, மோதல் தடுப்பு கருவி இன்ஜினில் பொருத்தி இருந்தால், 2 கி.மீ முன்பே ரயில் நிறுத்தப்பட்டு விபத்து தடுக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த ரயிலில் கருவி பொருத்தப்படவில்லை. மோதல் தவிர்ப்புக்கான கவச் கருவி 2022ல், 65 இன்ஜின்களில் தான் பொருத்தப்பட்டுள்ளன. 4,800 டீசல் இன்ஜின்கள், 8,400 மின்சார இன்ஜின்கள் என 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரயில் இன்ஜின்கள் இருக்க வெறும் 65 இன்ஜின்களில் மட்டுமே இந்தக் கருவி பொருத்தப்பட்டது மிகவும் கவலையளிக்கிறது. ஆகவே, இவ்விபத்துக்கு காரணம் ஒன்றிய அரசுதான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ஒன்றிய அரசின் அலட்சியமே ஒடிசா ரயில் விபத்துக்கு காரணம் இயங்குவது 13 ஆயிரம் இன்ஜின்கள் கவச் கருவி இருப்பது 65ல் மட்டுமே: மதுரை எம்.பி சு.வெங்கடேசன் காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: