ஒடிசா ரயில் விபத்தால் ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் வரும் 7ம் தேதி வடசென்னையில் நடக்கிறது

சென்னை: ஒடிசா ரயில் விபத்தால் ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் வடசென்னையில் வருகிற 7ம் தேதி நடக்கிறது. கலைஞரின் 100வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் கலைஞரின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது வழக்கம். அதேபோல் திமுக முன்னோடிகள் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இது கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் ஆகும். இதனால், நூற்றாண்டு விழாவை ஓராண்டு முழுவதும் கொண்டாட தமிழ்நாடு அரசு சார்பிலும், திமுக சார்பிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழா பிரமாண்ட பொதுக்கூட்டம் சென்னை புளியந்தோப்பு பின்னி மில் மைதானத்தில் நடக்கவிருந்தது. இந்த கூட்டத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற இருந்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திருமாவளவன், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், பேராசிரியர் காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, ஈ.ஆர்.ஈஸ்வரன், வேல்முருகன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள இருந்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு செய்திருந்தார். பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் 1 லட்சம் பேர் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து இந்த பொதுக்கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த மாபெரும் பொதுக்கூட்டம் வருகிற 7ம் தேதி(புதன்கிழமை) மாலை 6 மணியளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ஒடிசா ரயில் விபத்தால் ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் வரும் 7ம் தேதி வடசென்னையில் நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: