சிக்னல் லாக்கிங் சிஸ்டம் மாறியதில் மர்மம் ஒடிசா ரயில் விபத்து நாசவேலையா?..சிபிஐ விசாரிக்க ரயில்வே வாரியம் பரிந்துரை

பாலசோர்: நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து நாசவேலையாக இருக்கலாம் என ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானகா பஜார் ரயில் நிலையம் அருகே, கடந்த 2ம் தேதி இரவு 7 மணி அளவில் ஷாலிமாரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் மாறி, கிளைப்பாதையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தூக்கி வீசப்பட்டன. அவை, மற்றொரு தண்டவாளத்தில் வந்த பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் மீது மோதியதில் 3 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 275 பேர் பலியாகினர். 1100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்திற்கு என்ன தான் காரணம் என்பதே தற்போதைய முக்கியமான கேள்வியாக இருந்து வருகிறது. இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகம் உயர்மட்ட குழுவை அமைத்து விசாரித்து வருகிறது. இதற்கிடையே, இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதுவதை தடுக்கும் கவாச் பாதுகாப்பு கருவி ஏன் இந்த வழித்தடத்தில் பொருத்தப்படவில்லை எனவும், இதற்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டுமெனவும் பலதரப்பிலும் கோரிக்கைகள் வலுக்கின்றன. கவாச் கருவி பொருத்தப்பட்டிருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம் என மேற்கு வங்க முதல்வரும் முன்னாள் ஒன்றிய ரயில்வே அமைச்சருமான மம்தா கூறியிருந்தார். இந்நிலையில், ரயில் விபத்திற்கான காரணம் கண்டறியப்பட்டிருப்பதாக பாலசோரில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

நேற்று அவர் அளித்த பேட்டியில், ‘‘இந்த விபத்து முற்றிலும் வேறுபட்டது. விபத்துக்கான மூல காரணத்தை நாங்கள் கண்டறிந்துள்ளோம். ரயில்களின் இயக்கத்தை நிர்வகிக்கும் எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் மற்றும் பாயிண்ட் மெஷினில் ஏற்பட்ட மாற்றம் தான் விபத்திற்கு வழிவகுத்துள்ளது. அதாவது தவறான பாதையில் கோரமண்டல் ரயில் மாற்றப்பட்டுள்ளது. அது எப்படி, ஏன் நடந்தது என்பது பற்றி விசாரணை நடக்கிறது. இது இங்கிருந்தோ வெளியில் இருந்தோ செய்யப்பட்ட நாசவேலையாக கூட இருக்கலாம். அதை மறுப்பதற்கில்லை. இதைப் பற்றிய விளக்கங்களுக்குள் செல்ல விரும்பவில்லை. விசாரணை அறிக்கையில் முழு விவரம் தெரியவரும். விபத்துக்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கும் கவாச் அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கருத்துகள் உண்மையில்லை’’ என்றார்.

இதுகுறித்து ரயில்வே வாரிய அதிகாரிகள் டெல்லியில் அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது: எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் சிஸ்டம் என்பது ரயில்வே ஜங்ஷன், ஸ்டேஷன் மற்றும் சிக்னல்களில் ரயிலின் இயக்கத்தை நிர்வகிக்கும் பாதுகாப்பு அமைப்பு. இது சிக்னல் மற்றும் தண்டவாள சர்க்கியூட்களுடன் ஒருங்கிணைந்தது. முன்பு மனிதனால் சிக்னல் ஸ்விட்ச்கள் மாற்றப்பட்ட நிலையில் தற்போது அது கணினியுடன் இணைக்கப்பட்டு தானியங்கி மயமாக்கப்பட்டுள்ளது. இது எந்த தண்டவாளத்தில் ரயில் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்கும். அந்த பாதையில் வேறெந்த ரயிலும் செல்லவில்லை என்பதை உறுதி செய்த பிறகே சிக்னல் கொடுக்கும். மேலும், ரயில் செல்ல வேண்டிய தண்டவாளத்தையும் மாற்றி அமைக்க ஒட்டுமொத்த இயக்கத்தை கட்டுப்படுத்தும். இந்த அமைப்பு பழுதடைவதற்கான வாய்ப்பு 0.1 சதவீதம் மட்டுமே.

அதே சமயம் ஏதேனும் கோளாறு ஏற்பட்டாலும், அனைத்து சிக்னலையும் சிவப்பாக்கி விடும். அந்த சமயத்தில் அந்த வழித்தடத்தில் மொத்த ரயில்களின் இயக்கமும் நிறுத்தப்படும். எனவே இது கோளாறு ஆனாலும் பாதிப்புகள் ஏற்படாத தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. எலக்டரானிக் இன்டர்லாக்கிங் அமைப்பு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்குகிறது. இதை யாராவது உள்நோக்கத்துடன் சேதப்படுத்தி இருக்கலாம் என்பது மறுப்பதற்கில்லை. மேலும், இதன் கேபிள்கள் இருப்பது தெரியாமல் யாராவது பள்ளம் தோண்டி, அதனால் லாக்கிங் சிஸ்டம் சேதம் செய்திருக்கவும் வாய்ப்புள்ளது. விபத்து நடத்த சமயத்தில் லூப்லைனில் சரக்கு ரயில் நின்றுள்ளது. இரு மெயின் தண்டவாளங்களிலும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்ல பச்சை சிக்னல் விழுந்துள்ளது.

அப்போது எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் சிஸ்டம் மாறியதால் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மெயின் தண்டவாளத்திற்கு பதிலாக சரக்கு ரயில் நின்ற லூப் லைனுக்கு மாறி விபத்துக்குள்ளாகி உள்ளது. அதே சமயம் மற்றொரு தண்டவாளத்தில் சென்ற ஹவுரா எக்ஸ்பிரசின் கடைசி 2 பெட்டிகளும், பிரேக் வேகனும் கோரமண்டல் எக்ஸ்பிரசின் சிதறிய பெட்டிகளுடன் மோதி தடம்புரண்டுள்ளன. இவ்வாறு அதிகாரிகள் கூறி உள்ளனர். ரயில்வே துறை பயணிகளின் பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியம் காட்டியதாலேயே இந்த விபத்து நிகழ்ந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த விபத்து நாசவேலையாக இருக்கலாம் என ரயில்வே அமைச்சர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளது

*ஓட்டுநர் மீது தவறில்லை
ரயில்களின் அதிவேகமும் விபத்துக்கு காரணம் என சில தகவல்கள் வெளியாகின. இதை ரயில்வே நிர்வாகம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக ரயில்வே வாரிய உறுப்பினர் ஜெயா வர்மா சர்மா நேற்று அளித்த பேட்டியில், ‘‘விபத்து நடந்த போது பச்சை சிக்னல் விழுந்துள்ளது. இதனால் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் 128 கிமீ வேகத்திலும், ஹவுரா எக்ஸ்பிரஸ் 126 கிமீ வேகத்திலும் வந்துள்ளன. இந்த ரயில்களின் அனுமதிக்கப்பட்ட வேகம் 130 கிமீ. எனவே, விபத்திற்கு ரயில்களின் வேகம் காரணமில்லை. எனவே ஓட்டுநர்கள் மீது தவறில்லை.

சில விபத்துக்களை உலகின் எந்த தொழில்நுட்பத்தினாலும் தடுக்க முடியாது. உதாரணத்திற்கு ரயில்கள் வரும் போது, மலையில் இருந்து பாறாங்கற்கள் உருண்டு தண்டவாளத்தில் விழுந்தால் அந்த விபத்தை எந்த தொழில்நுட்பமும் தடுக்காது. ஆகவே கவாச் அமைப்புடன் இந்த விபத்தை தொடர்புபடுத்த முடியாது. கவாச் கருவி இரு ரயில்கள் மோதுவதை குறிப்பிட்ட தூர இடைவெளியில் லோகோ பைலட்டுக்கு எச்சரிக்கை செய்யும்’’ என்றார்.

The post சிக்னல் லாக்கிங் சிஸ்டம் மாறியதில் மர்மம் ஒடிசா ரயில் விபத்து நாசவேலையா?..சிபிஐ விசாரிக்க ரயில்வே வாரியம் பரிந்துரை appeared first on Dinakaran.

Related Stories: