மதிமுகவின் 5வது அமைப்பு தேர்தல் மதிமுக பொதுச்செயலாளராக வைகோ போட்டியின்றி தேர்வு

சென்னை: மதிமுகவின் 5வது அமைப்பு தேர்தலில், மதிமுக பொதுச் செயலாளராக வைகோ போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று மதிமுக தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மதிமுகவின் 5வது அமைப்பு தேர்தல் முறைப்படி நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. நிறைவாக தலைமை நிர்வாகிகள், ஆட்சிமன்ற குழு, தணிக்கைக்குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கான வேட்பு மனுக்கள் கடந்த 27ம்தேதி வழங்கபப்ட்டு பூர்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுக்களை போட்டியிடுபவர்கள் கடந்த 1ம்தேதி தலைமை அலுவலகமான தாயகத்தில் தாக்கல் செய்தனர்.

வேட்பு மனுக்களை நேற்று மாலை 3 மணி வரை திரும்ப பெறுவதற்கு அவகாசம் அளிக்கப்பட்டது. எவரும் வேட்பு மனுக்களை திரும்ப பெறவில்லை. எனவே இந்த பொறுப்புகளுக்கு வேட்பு மனு வழங்கியவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து சென்னை அண்ணா நகர் விஜய் மகாலில் வரும் 14ம்தேதி கூடும் 29வது பொதுக் குழுவானது இந்த நிர்வாகிகள் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கும், அங்கு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது முறைப்படி அறிவிக்கப்படும். மதிமுக பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு வைகோவும், அவைத்தலைவர் பொறுப்புக்கு ஆடிட்டர் அ.அர்ஜூனராஜ், பொருளாளர் பொறுப்புக்கு மு.செந்திலதிபன், முதன்மை செயலாளர் பொறுப்புக்கு துரை வைகோவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் துணை பொதுச் செயலாளராக மல்லை சத்யா, மணி, ஆடுதுறை முருகன், ராசேந்திரன், டாக்டர் ரொஹையா சேக் முகமது, ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களாக டாக்டர் கிருஷ்ணன், ராணி செல்வின், நிஜா, கே.கழக குமார், ஜெய்சங்கர், மதுரை சுப்பையா, பூவை பாபு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் தணிக்கை உறுப்பினர்களாக வழக்கறிஞர் அருணாச்சலம், நாமக்கல் பி.பழனிச்சாமி, வழக்கறிஞர் செந்தில் செல்வன், பாசறை பாபு, பரமக்குடி குணா, மதுரை பி.ஜி.பாண்டியன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

The post மதிமுகவின் 5வது அமைப்பு தேர்தல் மதிமுக பொதுச்செயலாளராக வைகோ போட்டியின்றி தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: