100வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு மவுன அஞ்சலி

சென்னை: கலைஞரின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ரயில் விபத்தை தொடர்ந்து நேற்று நடைபெற இருந்த திமுக பொதுக்கூட்டம் மற்றும் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. முன்னாள் முதல்வர் கலைஞரின் 100வது பிறந்த நாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் திருவுருச்சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். கடந்த ஆண்டு மே 28ம் தேதி திறந்து வைக்கப்பட்ட 16 அடி உயர கலைஞர் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து கொண்டாடும் 2வது நிகழ்ச்சி இதுவாகும்.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சி.வி.மெய்யநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், டி.ஆர்.பி.ராஜா மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட திமுக எம்பிக்கள், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், துணை சபாநாயகர் பிச்சாண்டி மற்றும் மயிலை த.வேலு, தாயகம் கவி, பரந்தாமன், அரவிந்த் ரமேஷ், ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா உள்ளிட்ட எம்எல்ஏக்கள், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நலவாரிய உறுப்பினர் ரெ.தங்கம், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதை தொடர்ந்து ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அண்ணா நினைவிடத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதே போல் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரத்தில் அமைந்துள்ள கலைஞரின் இல்லத்துக்கு சென்று அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். சிஐடி நகர் இல்லத்துக்கு சென்று கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது கலைஞரின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், கனிமொழி எம்பி மற்றும் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உடன் இருந்தனர்.

மேலும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞரின் திருவுருவசிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருவுருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உடன் இருந்தனர். மேலும் முரசொலி வளாகத்தில் உள்ள கலைஞரின் திருவுருவசிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கலைஞரின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு திமுகவின் மாவட்டங்கள் தொடங்கி ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்ட கிளை கழகங்கள் வரை, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. பல இடங்களில் கலைஞரின் வசனங்கள், ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்பட்டன. மேலும் இந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பு: கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒடிசாவில் பயங்கர விபத்திற்குள்ளாகி 230க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளது நாட்டையும் – நாட்டு மக்களையும் உலுக்கி அனைவரையும் பேரதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. மனித உயிர்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்துள்ள இந்த படுமோசமான விபத்தில் 900-த்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, மீட்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இத்தகைய சோகமான சூழ்நிலையில், தன் வாழ்நாள் முழுவதும் ஏழை எளியவர்களுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும், மனித நேயத்திற்காகவும் உரக்கக் குரல் எழுப்பிப் பாடுபட்ட கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்களை நடத்துவது சரியல்ல என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். ஆகவே இன்றைய நாள் முத்தமிழறிஞர் கலைஞரின் சிலைக்கு மட்டும் மரியாதை செலுத்தி, இந்த பயங்கரமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மற்றபடி, முத்தமிழறிஞர் கலைஞரின் 100வது பிறந்தநாள் தொடர்பாக இன்று(நேற்று) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிகள்-பொதுக்கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. வடசென்னையில் நடைபெறுவதாக இருந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்கப் பொதுக்கூட்டம் வேறொரு நாளில் நடைபெறும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதே போல தமிழக அரசு சார்பில் கலைஞரின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நடைபெறுவதாக இருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டது.

* டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் கலைஞர் பிறந்தநாள்
கலைஞரின் 100வது பிறந்த நாளையொட்டி டெல்லி பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு டெல்லிக்கான தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு இல்ல முதன்மை உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் சாட்டர்ஜி, கூடுதல் உள்ளுறை ஆணையர் சின்னதுரை, கூடுதல் இயக்குநர் பொ.முத்தையா, பொது மேலாளர் தெய்வசிகாமணி, தில்லி தமிழ் சங்க தலைவர் கே.வி.பெருமாள், பொதுச் செயலாளர் முகுந்தன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். பின்னர், டெல்லிக்கான தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் அளித்த பேட்டியில், ‘ஒடிசாவில் கோர ரயில் விபத்து நடந்துள்ளது. இவ்விபத்தில் சிக்கியவர்களை பாதுகாக்கும் வகையில் தேவையான உதவிகளை செய்வதற்காக டெல்லியில் உதவி மையம் எண் 9289516711 மற்றும் மின்னஞ்சல் முகவரி helpdesk.tnhouse@gmail.com கொடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

* ஒருநாள் துக்கம் அனுசரிப்பு
தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று(நேற்று முன்தினம்) ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொண்டுள்ளதோடு, ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும், தேவைப்படின், தமிழ்நாட்டின் மருத்துவக் குழு மற்றும் இதர உதவிகளை அனுப்பி வைப்பதாகவும் ஒடிசா மாநில முதல்வரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துக் கொண்டார். மேலும், மீட்பு பணிகளில் உடனிருந்து தமிழ் நாட்டினருக்குத் தேவையான உதவிகளை செய்திட போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த், ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் கொண்ட குழுவினரை விபத்து நடைபெற்ற ஒடிசா மாநிலத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார். இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று (நேற்று) ஒரு நாள் மட்டும் துக்கம் அனுசரிக்கப்படும். மேலும், அரசின் சார்பில் இன்று(ேநற்று) நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post 100வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு மவுன அஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: