நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து 294 பேர் பலி: 800க்கும் மேற்பட்டோர் படுகாயம்; விடியவிடிய மீட்பு பணிகள்; உயர்நிலை விசாரணைக்கு உத்தரவு; பிரதமர் மோடி பார்வையிட்டார்

பாலசோர்: நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 294 ஆக அதிகரித்துள்ளது. 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விடிய விடிய நடந்த மீட்புப் பணிகளை பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஆறுதல் கூறினார். ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில், தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, ஷாலிமர்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கரமாக மோதியது.

இதில், சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டு தூக்கி வீசப்பட்டன. அடுத்த 5 நிமிடத்தில் மற்றொரு தண்டவாளத்தில் வந்த பெங்களூர் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில், தடம்புரண்ட பெட்டிகள் மீது மோதியது. இதில் அந்த ரயிலின் இன்ஜின் உட்பட 3 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் ரயில் பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்று விழுந்து கோர விபத்துக்குள்ளாகின. இதனால் பயணிகள் பலரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலரும் படுகாயத்துடன் ரத்தக் களரியாக உயிர் தப்பினர்.

தகவலறிந்த ஒடிசா அரசும், ரயில்வே நிர்வாகமும் உடனடியாக மீட்பு பணியில் களமிறங்கின. தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்து உள்ளூர் மக்கள் உதவியுடன் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மீட்பு பணிகள் இரவு முழுவதும் நடந்தன. 100க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ், பஸ் மூலமாக காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். பெரிய கிரேன் உதவியுடன் கவிழ்ந்த பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டன. கேஸ் கட்டர்கள் மூலம் ரயில் பெட்டிகள் வெட்டப்பட்டு அதில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில், விடிய விடிய மீட்புப்பணிகள் நடந்த நிலையில், விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 294 ஆக அதிகரித்தது. 800க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மத்தியில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் பெருகிவிட்ட இந்த காலகட்டத்திலும், ஒரே இடத்தில் 3 ரயில்கள் மோதி விபத்து நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்துக்கான காரணத்தை அறிய ரயில்வே நிர்வாகம் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இது மனித தவறா அல்லது தொழில்நுட்ப கோளாறா என்ற ரீதியில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

இதற்கிடையே, விபத்து நடந்த பகுதிக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் நேற்று காலை நேரில் வந்து பார்வையிட்டனர். தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர் ஆகியோரும் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அதைத் தொடர்ந்து பிற்பகலில் பிரதமர் மோடி நேரில் வந்து மீட்புப் பணிகளையும், சீரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார்.
பின்னர், பாலசோர் மாவட்ட மருத்துவமனைக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

நேற்றுடன் மீட்புப்பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், தற்போது விபத்து பகுதியில் தண்டவாளங்களை சீரமைக்கு பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதில் 500 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே, விபத்திலிருந்து தப்பிய மற்றும் லேசான காயத்துடன் உயிர் தப்பிய பயணிகளை மீட்டு அழைத்து வர தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகா மாநில அரசுகள் ஏற்பாடு செய்துள்ளன. நாட்டையே உலுக்கி உள்ள இந்த ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு அரசியல் தலைவர்களும், உலக தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதேசமயம், பயணிகள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்காத ஒன்றிய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி உள்ளன. இந்த விபத்தை தொடர்ந்து, நேற்று 48 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 39 ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டன.

* சிக்னல் மாற்றிக்கொடுக்கப்பட்டது
சிக்னலில் ஏற்பட்ட கோளாறுதான் விபத்துக்குக் காரணம் என்று ரயில்வே அதிகாரிகள் கூறினாலும், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மெயின் லைனுக்கான சிக்னல் கொடுக்கப்பட்டு, பின்னர் மாற்றி லூப் லைனுக்குள் செல்ல சிக்னல் கொடுக்கப்பட்டது. இதுதான் விபத்துக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த போது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மணிக்கு 128 கிமீ வேகத்திலும், பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் 116 கிமீ வேகத்திலும் சென்று கொண்டிருந்தது. இந்த அறிக்கை ரயில்வே வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

* நிவாரணம் அறிவிப்பு
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. இதே போல, பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் கூடுதலாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

* 1200 ஊழியர், 200 ஆம்புலன்ஸ், 50 பஸ், 2 ஹெலிகாப்டர்கள்
விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணியில் சுமார் 1,200 பணியாளர்கள், 200 ஆம்புலன்ஸ்கள், 50 பேருந்துகள், 45 நடமாடும் சுகாதாரப் பிரிவுகள் ஈடுபடுத்தப்பட்டன. காயமடைந்த பயணிகளை வெளியேற்ற இரண்டு எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்காக இரவில் பாலசோர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 2,000 க்கும் மேற்பட்டோர் கூடினர். இதில் பலர் இரத்த தானம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து 294 பேர் பலி: 800க்கும் மேற்பட்டோர் படுகாயம்; விடியவிடிய மீட்பு பணிகள்; உயர்நிலை விசாரணைக்கு உத்தரவு; பிரதமர் மோடி பார்வையிட்டார் appeared first on Dinakaran.

Related Stories: