ஓரிரு நாளில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் வருவதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சேலம்காரர் அணியில் இருந்து கொண்டு அவருக்கே ‘ஆப்பு’ அடிக்கும் மாஜி அமைச்சரை தீவிர கண்காணிப்பில் யார் வைத்திருக்காங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியில் சேலம்காரர், தேனிக்காரர், குக்கர்காரர் என மூன்று அணியாக செயல்பட்டு வர்றாங்க. மனுநீதி சோழன், டெக்ஸ்டைல்ஸ், மன்னர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மூன்று அணியிலுமே மாஜி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளனர். சேலம்காரருக்கு அதிகாரபூர்வமாக கட்சி சின்னம் ஒதுக்கினாலும் இன்னும் இரண்டு தரப்பிலும் இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்கள் அணி மாறுவது குறித்த குழப்பத்தில் தான் இருக்காங்க. இதுல, கடலோர மாவட்ட மாஜி அமைச்சர் ‘பெல்லானவர்’ சேலம்காரர் அணியில் இருக்காருனு பேரு… இவர் ஆரம்பத்தில் இருந்தே தேனிக்காரர், சின்னமம்மி, குக்கர் தலைமை ஆகியோருக்கு எதிராக எதுவும் பேசினது கிடையாது. இதனால் சேலம்காரரர் அவர் மீது சமீபமாக கடும் அதிருப்தியில் இருக்கிறாரம். அத்துடன் பெல்லானவர் மீது ஒரு கண்காணித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் நெற்களஞ்சிய மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் சேலம்காரர் பங்கேற்றபோது பெல்லானவரை கடைசி வரையிலும் பார்த்து சிரிக்கவில்லை… கடைசிவரை மதிக்கவில்லை. மனுநீதி சோழன் மாஜி அமைச்சரிடம் தான் நெருக்கம் காட்டியுள்ளார். இந்த காட்சியை நேரில் பார்த்த பெல்லானவர், கட்சியில் நாம் ஓரங்கட்டப்பட்டு விட்டோம். தனக்கு சொல்லும்படி இல்லை என அவரது நெருங்கிய சகாக்களிடம் தற்போது புலம்பி வருகிறராம். இதற்கு காரணம் மனுநீதி சோழ மாஜி அமைச்சர் தான் என நினைத்த பெல்லானவர், அவர் மீது கோபத்தை காட்ட முடியாமல் அவரது அடிபொடிகள், நிர்வாகிகள், தொண்டர்களை வாய்க்கு வந்தபடி பேசி வருகிறாராம். என்ன பேசுகிறோம் என்று கூட அவருக்கு கொஞ்சம் கூட நிதானம் தெரியவில்லை. அந்த அளவுக்கு அவர் குழப்பத்தில் உள்ளாராம். இதற்கு முக்கிய காரணம் மாவட்ட செயலாளர் பதவி பறி போய் விடுமோ என அச்சத்தில் இருந்து வரும் பெல்லானவர் அந்த பதவியை நிரந்தரமாக தக்க வைப்பதற்கான திரைமறைவில் சில வேலைகளை பார்த்து வருகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மணல் கொள்ளையை தடுக்கும் காக்கியுடன் யார் கூட்டணி அமைத்துள்ளார்கள்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘புரம் என்று முடியும் மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் உள்ள வளமான ஊர் காவல் நிலையத்தில் காக்கி அதிகாரிகள் துணையுடன் மணல் திருட்டு ஜரூராக நடந்து வருகிறதாம். அண்மையில் கலெக்டர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்திலும், இக்காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கிராம மக்களுக்கு தெரியாமல், பவர் கட் செய்து விட்டு லோடு கணக்கில் மணலை அள்ளி சென்று புதுச்சேரி மாநிலத்தில் விற்பனை செய்கிறார்களாம்.

இதற்கு உடந்தையாக இருந்த காக்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், தமிழகத்தில் கனிம வளத்தை சுரண்டி பக்கத்தில் உள்ள மாநிலத்தில் விற்பனை செய்வதை தடுக்கவும் கலெக்டரிடம் வலியுறுத்தினர். ஆனால் புகார் அளித்து பல நாட்களாகியும் இரவில் பவர் கட் தொடர்வதும், மணல் திருட்டு நீடிப்பதும் வழக்கமாகியுள்ளது. புதுசா வந்த உட்கோட்ட காக்கி அதிகாரியும், இதற்கு உடந்தையாக இருப்பதாக புகார் கூறியிருக்காங்களாம். வளமான ஊர் காவல் நிலைய போலீசார் கரன்சியை காண்பித்து உட்கோட்ட அதிகாரியையும் வளைத்து போட்டு கனிமக்கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார்களாம். இது ஒரு புறமிருக்க நல்லூர் மணல் குவாரிகளில், விஷயம் வேறுவிதமாக நடக்கிறதாம். பாஸ் போடப்படும் எண்ணிக்கையை குறைத்து காட்டி, ஆயிரக்கணக்கில் தினமும் லோடு பறக்கிறதாம். இதனை யாரும் கண்டு கொள்வதில்லையாம். கணக்கு, வழக்கு குறித்து கேட்டால் மாதந்தோறும் ஆளுக்கு ஏற்ப, மாதம் மாமூல் சரியாக வந்துவிடுகிறதாம். இதனால் காக்கிகளும்- அதிகாரிகளும் காட்டிக்கொடுக்க மாட்டார்களாம் என்கிறார்கள் நேர்மையானவர்கள்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வேற என்ன பரபரப்பு தகவல் இருக்கு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தமிழகத்துல 2 ஆண்டுகள் முடிச்ச போலீஸ் அதிகாரிகளை மாற்ற அரசு முடிவு செஞ்சிருக்காம். விரைவில் அதற்கான உத்தரவுகள் வரும்னு பேசிட்டு இருக்காங்க. ஆனால் இந்த மாத இறுதியில டிஜிபி சைலேந்திரபாபு ஓய்வு பெறுவதால, அதோடு சேர்த்து பல மாற்றங்கள் வரும்னும் அதிகாரிகள் பேசிக்கிறாங்க. அதேநேரத்துல ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் மட்டும் ஓரிரு நாளில் வரும்னு சொல்றாங்க’’ என்றார்
விக்கியானந்தா.

The post ஓரிரு நாளில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் வருவதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Related Stories: