சுற்றுச்சுவர் கட்டுமான பணி தொடக்கம்: வேலூர் விமான நிலையத்தில் நவம்பர் முதல் விமான போக்குவரத்து

வேலூர்: வேலூர் விமான நிலையத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கும் கட்டுமான பணி தொடங்கி உள்ளது. இதனால் வரும் நவம்பர் மாதம் முதல் விமானம் இயக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒன்றிய அரசின் உதான் பிராந்திய இணைப்பு திட்டத்தின் கீழ் வேலூர் அப்துல்லாபுரத்தில் இருக்கும் வானூர்தி தடத்தை 20 பயணிகள் வரை அமர்ந்து பயணம் செய்யக்கூடிய சிறிய வகை விமானங்களுக்கான, விமான நிலையமாக விரிவாக்கம் செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்த விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக பிராந்திய இணைப்பு திட்டத்தின் கீழ் ₹60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் முழு வீச்சில் நடைபெற்றது. 700 மீட்டர் நீளமுள்ள ஓடுதளப்பாதை தற்பொழுது சிறிய பயணிகள் விமான சேவைக்காக 850 மீட்டர் ஓடுதளப்பாதையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விமான முனையம், தகவல் கட்டுப்பாட்டு மையம், ரேடார் கருவி அமைக்கும் இடம், சரக்கு முனையம், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் உள்ளிட்டவை அமைப்பதற்கான சிவில் கட்டுமான பணிகள் 90 சதவீதம் முடிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் 51 ஏக்கர் விமான ஓடுதளமாக இருந்த இடத்தை தற்பொழுது 47 ஏக்கர் வரை பொதுமக்களின் நிலங்களை கையகப்படுத்தி 98 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விமானங்கள் டேக் ஆப், லேண்டிங் செய்வதற்கு 25 அடி உயரத்திற்கு மேல் உயரமுள்ள கட்டிடங்கள், மரங்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் இடையூறாக இருக்கும் என்பதால் மேலும் 10.72 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி தருமாறு இந்திய வானுர்தி நிலையங்கள் ஆணைக்குழு கோரிக்கை வைத்தது.

இது தொடர்பாக மத்திய, மாநில அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் 10.72 ஏக்கர் தனியார் நிலத்தை கையகப்படுத்தும் திட்டம் தற்போது கைவிட்டுவிட்டுள்ளது. மேலும் இருக்கும் விமான நிலைய ஒடுதளத்தை வைத்து முதலில் சிறிய ரக விமானங்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் விமான நிலைய ஓடுதளத்தில் இருந்த புல்கள், செடிகள், கொடிகள், மரங்கள் போன்றவை அகற்றும் பணி ஜேசிபி இயந்திரம் மூலம் நிறைவு பெற்றது. தற்போது விமான நிலையத்தை சுற்றி சுற்றுசுவர் கட்டும் கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:2024ம் ஆண்டுக்குள் விமான சேவையை தொடங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி வேலூர் விமான நிலையமும் வரும் நவம்பர் மாதம் முதல் இயக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலில் சிறிய ரக பயணிகள் விமானங்கள் இயக்கப்பட உள்ளது. அதற்கான முதற்கட்ட பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விமான நிலையத்தை சுற்றி தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தற்போது விமான நிலையத்துக்கு கையகப்படுத்தப்பட்ட பகுதி மற்றும் நுழைவு வாயில் பகுதியில் திறந்த வெளிபகுதியாக உள்ளது. இதனால் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பாடும் சூழல் உருவாகும். இதை தடுக்கும் வகையில் அப்துல்லாபுரம் – ஆசனாம்பட்டு சாலை ஓரமாக தடுப்பு சுவர் அமைக்க கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதுதவிர சிறுசிறு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post சுற்றுச்சுவர் கட்டுமான பணி தொடக்கம்: வேலூர் விமான நிலையத்தில் நவம்பர் முதல் விமான போக்குவரத்து appeared first on Dinakaran.

Related Stories: