கூட்டுறவு சங்கம் யாருக்கு கீழ் வருகிறது? அமைச்சர் டிஆர்பி ராஜா, அண்ணாமலை சமூக வலைதளத்தில் மோதல்

சென்னை: தமிழகத்தில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வது ஆவின் பால் நிறுவனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி இருந்தார். இதுபற்றி தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பதிவில் ‘அமித் ஷாவின் 9 ஆண்டுகால வரலாற்றில் மு.க.ஸ்டாலின் எழுதியதை போல் தவறான கடிதத்தை யாரும் எழுதி இருக்க மாட்டார்கள்’ என்று குறிப்பிட்டார். அதாவது பால்வளத்துறைக்கும் அமித் ஷா துறைக்கும் சம்பந்தம் இல்லை என்று அவர் கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கடுமையாக விமர்சித்து ஒரு பதிவை வெளியிட்டார்.

அதில், அண்ணாமலை 20 ஆயிரம் புத்தகங்கள் படித்தது போதவில்லை என நினைக்கிறேன். அமுல் என்பது கூட்டுறவு சங்கம். மத்திய கூட்டுறவு துறை அமைச்சராக இருப்பவர் அமித் ஷா. எனவே தான் அவருக்கு கடிதம் எழுதப்பட்டது. தமிழக பாஜகவிற்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை. தங்கள் சொந்த அரசை பற்றியே தெரியவில்லை. உங்கள் தலைவர்களை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்குவதை எப்போது தான் நிறுத்தப் போகிறீர்களோ? நீங்கள் அடிக்கும் ஜோக் உங்களுக்கு தான். 9 ஆண்டுகால வரலாறு என்று கூறினீர்களே? அமித்ஷா அமைச்சராக இருப்பதே கடந்த 4 ஆண்டுகளாக தான். இது கூடவா தெரியவில்லை என்று அண்ணாமலையை கடுமையாக தாக்கியிருந்தார்.

இதற்கு பதிலளித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், பால்வள மேம்பாட்டு வாரியம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். துறைகள் தொடர்பான விபரம் தெரிந்தவர் யார் என்ற பாணியில் தொடரும் இந்த யுத்தம் வலைதளத்தில் உலா வருபவர்களால் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. ஆனால் கூட்டுறவுத்துறையை கவனிக்கும் அமித்ஷாவுக்கு கீழ்தான் பால்வளத்துறை வருகிறது என்பது கூட தெரியவில்லையா என்று அமித்ஷாவின் துறையை குறிப்பிட்டு, அமித்ஷாவின் டிவிட்டர் பக்கத்தை இணையத்தில் பொதுமக்கள் பகிர்ந்து அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். வழக்கம்போல இந்த விவகாரத்திலும் பொதுமக்களிடம் அண்ணாமலை வாங்கிக் கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கூட்டுறவு சங்கம் யாருக்கு கீழ் வருகிறது? அமைச்சர் டிஆர்பி ராஜா, அண்ணாமலை சமூக வலைதளத்தில் மோதல் appeared first on Dinakaran.

Related Stories: