சென்னையில் கொளுத்திய 108 டிகிரி வெயில்

சென்னை: தமிழ்நாட்டில் நீடித்து வரும் வெயிலின் காரணமாக சென்னையில் நேற்று 108 டிகிரி வெயில் கொளுத்தியது. இதே நிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வெயில் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், சில இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் ஒன்று உருவாகி வருவதால் ஈரப்பதும் உறிஞ்சப்படுகிறது. மேலும், தென் மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், வெப்ப சலனம் காரணமாக உருவாகியுள்ள வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சியால் தென் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்தும் வருகிறது. இருப்பினும், சில இடங்களில் வெயில் மற்றும் வெப்பத்தின் தாக்கம் நேற்று கூடியுள்ளது.

குறிப்பாக சென்னை மாவட்டத்தில் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை கணிசமாக வெப்பம் அதிகரித்துள்ளது. கரூர் மாவட்டத்தில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியசும், கோவை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், வேலூர் மாவட்டங்களிலும் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சென்னை மீனம் பாக்கத்தில் 108.3 டிகிரியும், நுங்கம் பாக்கத்தில் 107.4, திருத்தணியில் நேற்று 106.3 டிகிரியும் வெயில் கொளுத்தியது. தாம்பரம், செங்கல்பட்டு, வந்தவாசி, ஆற்காடு, காஞ்சிபுரம், திண்டிவனம், விழுப்புரம், திருக்கோயிலூர், ஆரணி, செஞ்சி 102 டிகிரி, வேலூர், போளூர், சேத்பட்டு, திருவண்ணாமலை, உளுந்தூர்பேட்டை, நெய்வேலி, சின்னசேலம், புதுக்கோட்டை, பெரம்பலூர், நெல்லை, ஜெயங்கொண்டம், சீர்காழி, தஞ்சாவூர் 100 டிகிரி, கும்பகோணம், கடலூர், ஈரோடு 99 டிகிரி வெயில் நிலவியது.

இந்நிலையில், மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக 6ம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் 4ம் தேதி வரை 100 டிகிரி முதல் 104 டிகிரி வரை வெயில் நீடிக்கும். ஓரிரு இடங்களில் 2 மதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பைவிட வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், 6ம் தேதி வரையில் மன்னார் வளைகுடா பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள், அதை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கிமீ வேகத்தில் வீசும். அதனால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

The post சென்னையில் கொளுத்திய 108 டிகிரி வெயில் appeared first on Dinakaran.

Related Stories: