ஒன்றிய அரசுக்கு கிலி

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. டெல்லியில் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, ஒன்றிய பாஜ அரசுக்கும், டெல்லியில் ஆட்சி செய்துவரும் ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே அதிகாரப்பகிர்வு, ஆட்சி அதிகாரம் உள்ளிட்ட பல விஷயங்களில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த சூழலில், ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் உள்பட மாநில அரசின் நிர்வாகத்தை கட்டுப்படுத்துவது குறித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நீர்த்துப்போக செய்யும் வகையில் ஒன்றிய அரசு, அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. இந்த அவசர சட்ட மசோதா, நாடாளுமன்றத்திற்கு வரும்போது எதிர்ப்பது தொடர்பாக எதிர்க்கட்சிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.

அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூ. தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்களை கெஜ்ரிவால் சந்தித்து ஆதரவு திரட்டியுள்ளார். ஒன்றிய அரசின் அவசர சட்டத்துக்கு எதிரான ஆம் ஆத்மியின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடித்து திரும்பிய, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினையும், கெஜ்ரிவால் நேரில் சந்தித்து ஆதரவு கோரியுள்ளார். அவருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் முழு ஆதரவு அளித்துள்ளார். பக்கபலமாக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார். இந்த சந்திப்பு, தேசிய அரசியலில், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்ற பேச்சுக்கள் வலுத்துள்ள நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமையும்போது அதில் தமிழ்நாடு முதல்வரின் பங்கு பெரிய அளவில் இருக்கும் என்பது அரசியல் நோக்கர்களின் கணிப்பாக உள்ளது. எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின்-கெஜ்ரிவால் சந்திப்பு தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்புக்கு பிறகு, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் ஜார்க்கண்ட் சென்றனர். ராஞ்சியில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை சந்தித்து ஆதரவு கோரியுள்ளனர்.

நாடாளுமன்ற மக்களவையில் பாஜவுக்கு தனிப்பெரும்பான்மை இருப்பதால் அங்கு, இந்த அவசர சட்டம் எளிதாக நிறைவேறிவிடும். அதே வேளையில், மாநிலங்களவையில் அந்த நிலை இல்லை. வெறும் 93 உறுப்பினர்கள் மட்டுமே பாஜ பக்கம் உள்ளனர். அதனால், மாநிலங்களவையில் இச்சட்டத்திருத்தம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் கெஜ்ரிவால் தீவிர முனைப்பு காட்டி வருகிறார். இந்த விஷயத்தில் கெஜ்ரிவாலுக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பக்கபலமாக இருப்பதால், ஒன்றிய அரசுக்கு கிலி பிடித்துள்ளது. பாஜ படையின் தூக்கம் கலைந்துள்ளது.

The post ஒன்றிய அரசுக்கு கிலி appeared first on Dinakaran.

Related Stories: