தமிழ்நாட்டில் சிறந்த மருத்துவ கட்டமைப்பு உள்ளது: அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

சென்னை: தமிழ்நாட்டில் சிறந்த மருத்துவ கட்டமைப்பு உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். சென்னை அமைந்தகரை ஜெம் மருத்துவமனையின் புதிய கிளை காஸ்ட்ரோஎன்ட்ரோலஜி மற்றும் மேம்பட்ட லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை மருத்துவமனையை நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: சென்னை அமைந்தகரையில் ஜெம் மருத்துவமனை புதிய அற்புதமான மருத்துவ சேவை தொடங்கி உள்ளது. ஜெம் மருத்துவமனை தலைவர் உலகளாவிய பல்வேறு சாதனைகளை படைத்து உயரிய விருதுகளை பெற்றுள்ளார்.

அவருடைய முயற்சியால் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வயிறு சம்மந்தமான பிரச்னைக்கு சிறந்த சேவையை செய்து வருகிறது. மேலும், சென்னை பெருங்குடியை தொடர்ந்து, அமைந்தகரையில் நவீன வசதிகளின் கூடிய புதிய மருத்துவமனை இங்கு அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பு சிறந்த கட்டமைப்பாக இருக்கிறது. அரசு துறையுடன் தனியார் மருத்துவமனையின் பங்களிப்பும் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டமும், தனியார் மருத்துவமனையுடன் இணைந்து செயல்படுகிறது. தமிழ்நாடு அரசுடன் தனியார் மருத்துவமனையின் திட்டங்கள் அனைத்தும் ஏற்கனவே இணைப்பில் இருக்கிறது. தேவைக்கேற்ப இணைந்து செயல்படும் என்றார்.

ஜெம் மருத்துவமனை தலைவர் பழனிவேலு கூறுகையில், ‘‘2001 ஆம் ஆண்டில் ஜெம் மருத்துவமனையானது இந்தியாவில் முதல்முறையாக இரைப்பை குடலியல் பிரச்னைகளுக்கான சிறப்பு மருத்துவமனையாக நிறுவப்பட்டது முக்கியமாக, ஜிஐ புற்றுநோய்கள், குடலிறக்கம், உடல் பருமன், கல்லீரல் பிரச்னைகள், லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சைகள் மற்றும் ரோபாட்டிக் அறுவை சிகிச்சை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. மேலும் ஜெம் மருத்துவமனை காஸ்ட்ரோஎன்ட்ரோலஜி மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை துறையில் உலகத்தரம் வாய்ந்த சுகாதார சேவையை வழங்குகிறது.’’ என்று கூறினார். இந்த நிகழ்ச்சியின் போது, ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பழனிவேலு, தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் அசோகன், இயக்குனர் டாக்டர் செந்தில்நாதன் , பிரவீன் ராஜ் மற்றும் நிர்வாக இயக்குனர் பிரியா செந்தில்நாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post தமிழ்நாட்டில் சிறந்த மருத்துவ கட்டமைப்பு உள்ளது: அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: