மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி

டெல்லி: மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட 7 பேர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். இதுதொடர்பாக பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது கடந்த சில வாரங்களுக்கு முன் 2 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. அவரை கைது செய்யக் கோரி கடந்த ஏப்ரல் 23 முதல் மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் தொடர்ந்து டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த மே 28ம் தேதி புதிய நாடாளுமன்றம் திறப்பு விழாவின் போது நடந்த போராட்டத்தின் போது, மல்யுத்த வீரர், வீராங்கனைகளை போலீசார் கைது செய்தனர். அதனால் அவர்கள் தங்களது பதக்கங்களை கங்கையில் வீசுவதாக கூறினர். விவசாய அமைப்புகள் தலையிட்டு 5 நாட்கள் அவகாசம் கேட்டன. இதனிடையே அவர்களுக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர்; இந்தியாவுக்காக 25 சர்வதேச பதக்கங்களை வென்றவர்கள் நீதி கேட்டு தெருக்களில் அழுது கொண்டு இருக்கின்றனர். ஆனால், 15 பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான எம்.பி., பிரிஜ் பூஷன் சரண் சிங், பிரதமரின் பாதுகாப்பில் உள்ளார். மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Related Stories: