வடமாநில தொழிலாளர்கள் 50 சதவீதம் பேர் ஆப்சென்ட்

 

கோவை, ஜூன் 2: கடந்த ஏப்ரல் மாதம் ஹோலி பண்டிக்கை மற்றும் வதந்தி காரணமாக கோவை மாவட்டத்தில் இருந்து 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். அவர்களில் 50 சதவீதம் பேர் மீண்டும் வேலைக்கு திரும்பியுள்ளனர். எனினும் தொழில் நிறுவனங்களில் ஜாப் ஆர்டர்கள் அதிகரிப்பால் வடமாநில தொழிலாளர்கள் இன்றி பணி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான சிறு குறு, நடுத்தர மற்றும் பெரும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில் மட்டுமே பல்வேறு தொழில்களில் 5 லட்சம் வடமாநிலத்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், அதன் காரணமாக கோவையில் இருந்து அவர்கள் வெளியேறி வருவதாகவும், வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவி வந்தன. இதையடுத்து கோவையில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் ஊர்களுக்கு செல்வதற்கு கோவை ரயில் நிலையங்களில் குவிந்தனர். வதந்தி ஒரு புறம் இருக்க ஹோலி பண்டிகை கொண்டாடவும் ஊர்களுக்கு செல்ல குவிந்தனர். சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் சென்றனர். இதனிடையே பீகார், ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீண்டும் கோவைக்கு 50 சதவீதம் தொழிலாளர்கள் பணிக்கு தற்போது திரும்பியுள்ளனர்.

The post வடமாநில தொழிலாளர்கள் 50 சதவீதம் பேர் ஆப்சென்ட் appeared first on Dinakaran.

Related Stories: