கோவை அருகே ராட்சத விளம்பர பலகை சரிந்து விழுந்து 3 பேர் பலி

சோமனூர்: கோவை அருகே 80 அடி உயர ராட்சத விளம்பர பலகை சரிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தனர். கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்துள்ள புதுப்பாலம் பிரிவு பள்ளக்காடு செல்லும் வழியில் பூட்டுக்காட்டு தோட்டத்தை சேர்ந்த ராமசாமி (60) என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஒப்பந்த அடிப்படையில் 2 ராட்சத விளம்பர பலகை உள்ள நிலையில், அதே பகுதியில் 60 அடி நீளத்தில், 80 அடி உயரத்தில் புதிதாக ஒரு விளம்பர பலகை அமைக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்தது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த 7 தொழிலாளர்கள் அதே பகுதியில் தங்கி இருந்து இந்த பணியில் ஈடுபட்டு வந்தனர். ராட்சத கம்பிகள் நடும் பணி முழுமையாக முடிந்த நிலையில் நேற்று மாலை அந்த கம்பிகளில் விளம்பர பிளக்ஸ் பேனர் பொருத்தும் பணியில் 5 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்ததால் விளம்பர பலகை சரிந்து கீழே விழுந்தது.

இதில் சேலம் மாவட்டம் கொண்டமா பேட்டையை சேர்ந்த சேகர் (55), ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த குமார் (40), பொன்னமா பேட்டையை சேர்ந்த குமார் (50) ஆகிய 3 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். சேலம் மாவட்டம் அம்மாபேட்டை சேர்ந்த அருண்குமார், சண்முகசுந்தரம் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பலியானவர்களில் சேகர் பலத்த காயத்துடனும், மற்ற 2 பேரும் காயமின்றியும் உயிரிழந்துள்ளனர். எனவே விளம்பர பலகை சாய்ந்து அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதியதில் மின்சாரம் தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

The post கோவை அருகே ராட்சத விளம்பர பலகை சரிந்து விழுந்து 3 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: