மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு: கட்சி தலைமை அறிவிப்பு

சென்னை: மதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு நேற்று வைகோ வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அவர் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மதிமுகவின் உட்கட்சி தேர்தல் வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது. கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதில் மதிமுகவைச் சேர்ந்த பலர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில், நேற்று காலை மதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு வைகோ, பூர்த்தி செய்த வேட்பு மனுவை தேர்தல் பொறுப்பாளர்கள் வழக்கறிஞர் பிரியகுமார், ஆ.வந்தியதேவன், ஆவடி அந்திரிதாஸ், தாயகம் ருத்திரன் ஆகியோரிடம் வழங்கினார். அவரை எதிர்த்து வேறு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. எனவே மதிமுக பொதுச்செயலாளராக வைகோ மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இதை தொடர்ந்து, அவைத் தலைவர் பதவிக்கு அர்ஜுன ராஜ், பொருளாளர் பதவிக்கு செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் பதவிக்கு துரை வைகோ, துணைப் பொதுச்செயலாளர் பதவிக்கு மல்லை சத்யா, ஆடுதுறை மணி, ராஜேந்திரன், ரொஹையா சேக் முகமது, ஆட்சி மன்ற குழு உறுப்பினர் பதவிக்கு கிருஷ்ணன், ராணி செல்வின், கே.ஏ.எம்.நிஜான், கே.கழக குமார், ஜெய்சங்கர், சுப்பையா, பூவை பாபு, தணிக்கைக்குழு தலைவர் பதவிக்கு அருணாசலம், பழனிச்சாமி, அருணாசலம், செந்தில்செல்வன், பாசறை பாபு, குணா, பாண்டியன் ஆகியோர் பூர்த்தி செய்த வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

வேட்பு மனு தாக்கல் குறித்து மதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘ மதிமுக உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. தலைமை கழக நிர்வாகிகள், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், தணிக்கைக் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று நடைபெற்றது. காலை 10 மணி முதல் 12 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. இந்த பதவிகளுக்கு இவர்கள் மட்டுமே வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர்.கூடுதலாக எந்த பொறுப்புகளுக்கும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, போட்டி இல்லை என்று அறிவிக்கிறோம்’’ என கூறப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு முறைப்படி வரும் 3ம்தேதி வெளியிடப்படுகிறது.

வாரிசு அரசியல் இல்லை
வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மதிமுகவில் எத்தனையோ புயல் வீசினாலும் இந்த இயக்கத்தை மன உறுதியுடன் நடத்தி வருகிறோம். என்னுடைய மகன் துரை வைகோ வாக்கெடுப்பு மூலமாகவே தேர்ந்தெடுக்கப்பட்டார். மதிமுகவில் வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை. வரும் காலத்திலும் இதில் எந்தவொரு மாற்றமும் இருக்காது. மதிமுகவில் இளைஞர்கள் அதிகமாக இணைகிறார்கள். இதனால் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி மதிமுக பயணிக்கும்’’ என்றார்.

The post மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு: கட்சி தலைமை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: