அனைத்து வகையான காய், கனி வரத்து குறைந்ததால் கோயம்பேட்டில் காய்கறிகள் விலை ‘கிடுகிடு’ உயர்வு: ஒரு மாதத்துக்கு விலை அதிகமாகவே இருக்கும்

சென்னை: கோடைக்காலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. எனவே, பொதுமக்கள் காய்கறிகளை குறைந்த அளவிலேயே வாங்கிச் சென்றனர். காரணம் வழக்கத்தைவிட வரத்து குறைவாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் லாரிகள் மூலம் காய்கறிகள் வருகிறது. அதாவது, தினமும் 650 வாகனங்களில் 7000 டன் காய்கறிகள் வரும் நிலையில், நேற்று மார்க்கெட்டுக்கு 350 வாகனங்களில் 5000 ஆயிரம் டன் காய்கறிகள் மட்டுமே வந்தன. இதனால் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.

இந்நிலையில், 12 ரூபாய்க்கு விற்ற ஒருகிலோ வெங்காயம் நேற்று காலை ₹25க்கும் சின்ன வெங்காயம் ₹55 லிருந்து ₹80க்கும், நாட்டு தக்காளி ₹10லிருந்து ₹30க்கும், நவீன் தக்காளி ₹30 லிருந்து ₹40க்கும், கேரட் ₹30 லிருந்து ₹50க்கும் பீன்ஸ் ₹50 லிருந்து ₹80க்கும், முட்டை கோஸ் ₹5 லிருந்து ₹20க்கும், கத்திரிக்காய் ₹30 லிருந்து ₹70க்கும், வெண்டைக்காய் ₹10 லிருந்து ₹25க்கும் அவரைக்காய் ₹35 லிருந்து ₹55 க்கும், பீட்ரூட் ₹20 லிருந்து ₹30க்கும், சவ்சவ் ₹10 லிருந்து ₹20க்கும், முள்ளங்கி ₹15 லிருந்து ₹25க்கும் முருங்கைக்காய் ₹30 லிருந்து ₹80 க்கும், பச்சை மிளகாய் ₹30 லிருந்து ₹45க்கும், குடை மிளகாய் ₹30 லிருந்து ₹70க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கோயம்பேடு மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறும்போது, ‘‘கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைவால் அனைத்து காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்னும் ஒரு மாதம் நீடிக்கும்.’’ என்றார்.

The post அனைத்து வகையான காய், கனி வரத்து குறைந்ததால் கோயம்பேட்டில் காய்கறிகள் விலை ‘கிடுகிடு’ உயர்வு: ஒரு மாதத்துக்கு விலை அதிகமாகவே இருக்கும் appeared first on Dinakaran.

Related Stories: