வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம்: கலெக்டர், எஸ்பி பங்கேற்பு

காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் பாதுகாப்புகுறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. காஞ்சிபுரத்தில் அத்திவரதர் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த மே31ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, ஜூன்9ம்தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான ஜூன் 2ம்தேதி (இன்று) கருடசேவை, 6ம்தேதி திருத்தேர் உற்சவமும், 8ம்தேதி தீர்த்தவாரி நடை பெறவுள்ளது. இத்திருவிழாவில் உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து சுமார் 4 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இதனால், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தார்.

இத்திருவிழா சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் முன்னிலை வகித்தார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல்நிலைய ஆய்வாளர்கள் (சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து), இந்துசமய அறநிலையத்துறை கோயில் நிர்வாகிகள், மாநகராட்சி, தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை, போக்குவரத்துறை, பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை, உணவுப் பாதுகாப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த்துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் பேசியதாவது: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழாவின், கருடசேவை மற்றும் திருத்தேர் செல்லும் சாலையில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின் வயர்களில் மின் விபத்து ஏற்படாத வண்ணம் தற்காலிகமாக மின் இணைப்பை துண்டித்தல், மின்கசிவு ஏற்படாமல் பராமரித்தல் மற்றும் தேருக்கு இடையூராக உள்ள மின்சார ஒயர்களை முறைப்படுத்த வேண்டும். திருவிழாவின் பாதுகாப்பிற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உட்பட சுமார் 1500 காவல்துறையினருடன், ஊர்க்காவல்படையினர்.

என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். முக்கிய இடங்களில் உயர் கோபுரங்கள் அமைத்து காவலர்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இத்திருவிழா நாட்களில் குழந்தைகள் மற்றும் முதியோர்களை அழைத்துச் செல்பவர்கள் பாதுகாப்பாக அழைத்துச்செல்ல வேண்டும். மக்களுக்கு உதவியாக முக்கிய இடங்களில் காவல்துறை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் சார்பில் திருத்தேர் செல்லும் முக்கிய வீதிகளில் குடிநீர் தொட்டிகள், நடமாடும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், குற்றச்செயல்களை தடுக்கும் பொருட்டு தொடர்ந்து நகரின் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நாச வேலைகளில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கும் பொருட்டு காவல்துறையினர் நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். உணவுப் பாதுகாப்புத்துறை மற்றும் இந்து அறநிலையத்துறையிடம் அனுமதி பெற்ற பின்னரே அன்னதானம வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் மேற்படி அன்னதானம் வழங்கும் இடங்களில் மட்டுமே அன்னதானம் பெற வேண்டும். திருவிழா காலங்களில் கோயிலை சுற்றியுள்ள இடங்கள் மற்றும் சாமி ஊர்வலம் செல்லும் பாதைகளை தூய்மையாக வைத்துக்கொள்ளும் பொருட்டு, மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்.

திருவிழாக்காலங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் மாற்று வழித்தடங்களை பயன்படுத்த வேண்டும். மருத்துவத் குழு சார்பில், திருவிழா காலங்களில் திருத்தேர் மற்றும் சாமி ஊர்வலம் செல்லும் பாதைகளில் உள்ள முக்கிய சந்திப்புகளில் பந்தல் அமைத்து மருத்துவ முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் அவசர காலங்களில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மேலும், இத்திருவிழா நாட்களில் பணிக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் முன் ஏற்பாடாக திட்டமிட்டு செயல்பட வேண்டும். இத்திருவிழா நல்ல முறையில் நடைபெறுவதற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் காவல்துறைக்கு, முழு ஒத்துழைப்பு தருமாறு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

* எஸ்பி ஆய்வு
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த மே மாதம் 31ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான கருடசேவை இன்று வெள்ளிக்கிழமையும், தேரோட்டம் வரும் 6ம் தேதியும், 8ம் தேதி தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது. இவ்விழாவைக் காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட மக்கள் சுமார் 4 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேரோட்டத்தையும், விழாவையும் சிறப்பாக நடத்துவது தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காஞ்சிபுரம் எஸ்பி சுதாகர் கோயில் வளாகம் மற்றும் தேர் நிற்கும் இடம் ஆகிய இடங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது ஏடிஎஸ்பி க்கள் பாலகுமாரன், சார்லஸ் ராஜதுரை, டிஎஸ்பி க்கள் ஜூலியஸ் சீசர் (காஞ்சிபுரம்) சுரேஷ்குமார் (மதுவிலக்குப்பிரிவு) வெங்கட கிருஷ்ணன் (மாவட்டக் குற்றப்பிரிவு)மாநகராட்சி ஆணையர் கண்ணன், தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல், கோயில் செயல் அலுவலர் சீனிவாசன் மற்றும் கோயில் பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டு கூட்டாகவும் ஆய்வு மேற்கொண்டனர். தேருக்கு பெருமாள் எழுந்தருளிய பின்னர் பக்தர்கள் தேர் மீது ஏறி பெருமாளை தரிசித்து விட்டு இறங்குவது வழக்கமாக இருந்து வருவதால் பக்தர்கள் ஏறவும், இறங்கவும் போதுமான வசதிகள் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தேரின் சக்கரங்கள் சுழலும் நிலைமை, தேரின் கொள்ளளவு எடை பற்றிய விபரங்கள், தேரின் உயரம், தேர் வரும் பாதைகள் ஆகியன குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. பின்னர் கோயில் வளாகத்திற்குள் கூட்டம் அதிகமாக இருந்தால் பக்தர்களின் வரிசையை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

The post வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம்: கலெக்டர், எஸ்பி பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: