தாமரை பிரமுகர் லோக்கல் காக்கிகளை பார்த்து பயத்தில் இருக்கும் ரகசியத்தை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘ஆர்ப்பாட்டத்தில் அளந்துவிட்ட தமிழான இலை கட்சி பிரமுகரை பற்றி சொல்லுங்களேன்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் பல்வேறு இடங்களில் நடந்த நிலையில் தலைவர் பதவியில் உள்ள தமிழானவர் நாகர்கோவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசி கலக்கினாராம். பொதுக்கூட்டத்தில் பேசும் அளவுக்கு நாகர்கோவில் தலைவர்கள் அல்லது பேச்சாளர்கள் இல்லாத ஊரா என்று கட்சியினர் மத்தியில் சலசலப்பு இருக்காம். நாகர்கோவில்ல யாராவது பிரச்னை செய்யப்போறங்க என்று நினைத்த தமிழானவர், ‘சேலம்காரரே என்னை நாகர்கோவில் ஆர்ப்பாட்டத்தில் சென்று பேசுங்கடானு சொன்னார். அதுவும் எங்க வைச்சு சொன்னார் தெரியுமா, வேலூரில் நடந்த திருமண வீட்டில் சந்தித்தோம். அப்போது நேரில் என்னிடம் பேசி என்னை இங்கு அனுப்பினார் என்றாராம். இத்தனைக்கும் நாகர்கோவில்ல நீங்க ஏன் இங்க வந்து பேசறீங்கனு..

ஒரு முன்னெச்சரிக்கையாக தான் சொன்னாராம். காரணம், நாகர்கோவிலை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சரான சுந்தரமானவர் ஊரில் இல்லை, வெளிநாடு சென்றுவிட்டார். ஆர்ப்பாட்டத்திற்கு வர மாட்டார் என்று தெரிந்ததும் அந்த இடத்தை நிரப்பவும், சேலம்காரருடன் நானும் நெருக்கமாக உள்ளேன் என்று காண்பிக்கத்தானாம்… அரசியல் சதுரங்க விளையாட்டில் இது சாதாரணம் என்கின்றனர் இலை கட்சியில் உசேனை நன்றாக தெரிந்தவர்கள்… அதுக்கு பொய் பேசக்கூடாது இல்லையா என்று பேசிக் கொள்கிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தாமரையை சுற்றி இருக்கும் நீரை போல, அதன் தலைவரை காக்கிகள் சுத்தி சுத்தி வர்றாங்களாமே, ஏனாம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவை கிணத்துக்கடவு அருகே தாமரைக்கட்சி பிரமுகர் ஒருவர் கிடைத்தவரை லாபம் எனக்கூறி, கோவையில் பல்வேறு பகுதிகளில் காசு பார்ப்பதில் கில்லாடியாம்.

கனிமவள கொள்ளை, ஒன்றிய அரசின் கான்டிராக்ட், பிரதமர் வீடு கட்டும் திட்டம் என பல வகைகளில் மூக்கை நுழைத்து கரன்சியாக குவித்து வருகிறாராம். தற்போது, புனித பயணம் செல்வோரை குறி வைத்து, பணம் பிடுங்க துவங்கியுள்ளாராம். ஒன்றிய அமைச்சர் ஒருவருக்கு கொடுக்கவேண்டும் என காரணம் கூறுகிறாராம். நான் கேட்பதை கொடுத்தால்தான் உங்களுக்கு விசா மற்றும் சிறப்பு அனுமதி விரைவாக கிடைக்கும். சம்திங் வெட்டாவிட்டால், விண்ணப்பத்தில் ஏதாவது குறை கண்டுபிடித்து தள்ளுபடி செய்து விடுவோம்னு சொன்னாங்களாம். பிறகு நீங்கள் புனித பயணம் மேற்கொள்ள முடியாது அன்பாக எச்சரிக்கை விடுத்து பணத்தை கறந்துவிடுகிறாராம். இதுபற்றிய தகவல் கசிய துவங்கியதும், மாவட்ட உளவுப்பிரிவு போலீசார் அந்த நபரை தீவிரமாக கண்காணித்து வர்றாங்களாம்.

அந்த நபரை, பிடிக்க போலீஸ் டீமும் களத்தில் குதித்து இருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அதிகாரியின் விடுமுறைக்காக விவசாயிகள் காத்திருப்பது எந்த விதத்துல நியாயம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘குமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு சார்பில் நேற்று அணைகளை பாசனத்துக்கு திறப்பதற்கு முன்பு கால்வாய்களை தூர்வாருவது வழக்கம். ஆனால் நிதி ஒதுக்கீடு காரணமாக பணிகள் ஏப்ரல் மாதம் எப்ேபாதுமே தாமதம் ஆகுமாம். ஆனால் இந்த முறை ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டதாம். ஆனால், டெண்டர் பணிகளை மேற்கொள்ள வேண்டிய பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் இரண்டு வாராமாக ஆபிசில காணலையாம். செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியலையாம்.

அந்த அதிகாரி வேண்டா வெறுப்பாக இந்த மாவட்டத்தில் இருப்பதால விவசாயிகள், உணவு உற்பத்தி உள்பட பலவும் பதிப்பதோடு, இவரால அரசுக்கு கெட்ட பெயர் என்று மக்கள் புலம்புகிறார்கள்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வெயிலுக்கு கதர் சட்டடை இதமாக இருந்தாலும், அந்த கட்சியை சேர்ந்தவங்க பண்றது காமெடியாக இருக்காமே, உண்மையா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டத்துல கதர் கட்சியோட அலுவலகம் அண்ணா சாலையில இருக்குது. அந்த கட்சி அலுவலகத்துல மாஜி பிஎம் நினைவுநாளையொட்டி, நினைவு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செஞ்சாங்க. கதர் கட்சி சார்புல, உருவ படத்துக்கு மலர் தூவி, மரியாதை செய்ற நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடந்துச்சு.

அப்போ அஞ்சலி செலுத்த கதர் கட்சியில இருந்து 10 பேர் வந்தாங்க. இதுல அங்கிருந்த சிலருக்கிடையில, கருத்து வேறுபாடாம். அப்போது, அங்கிருந்த மற்ற நாலு நிர்வாகிங்க, இருக்கிறதே நாலு பேருதான், நமாலே ஒற்றுமையில்லாம சண்ட போட்டுகிட்டா.. வர்ற நாடாளுமன்ற தேர்தல்ல, கூட்டணி கட்சிகளோட, சேர்ந்து எப்படி வேலை செய்றதுன்னு சமாதானம் பேசினாங்களாம். ஏற்கனவே, கட்சி மாஜி தலைவர் பதவி பறிப்பு சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தபோது, வெயிலூர்ல குறைந்த அளவுலதான் கட்சிகாரங்க இருந்தாங்க. நிலைமை இப்படி இருக்க கட்சியை வளர்ப்பது எப்படின்னு கடை நிலை தொண்டர்கள் யோகிக்கிறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post தாமரை பிரமுகர் லோக்கல் காக்கிகளை பார்த்து பயத்தில் இருக்கும் ரகசியத்தை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Related Stories: