தொழிலாளி திடீர் சாவு: என்எல்சி நிர்வாக அலுவலகம் முற்றுகை

வடலூர், ஜூன் 1: நெய்வேலி அருகே ஊத்தங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (54). இவரது தம்பி செல்வராஜ். இருவரும் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் இரண்டில் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்ற 2 பேரும் வேலை முடித்துவிட்டு நேற்று காலை சுரங்கத்திலிருந்து இரண்டு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றனர். அப்போது திடீரென மயக்கம் வருவதாக கூறிய ராஜேந்திரன் வண்டியை நிறுத்த சொல்லி உள்ளார். அதன்படி வண்டியை நிறுத்திய செல்வராஜ் உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் ராஜேந்திரனை என்எல்சி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ராஜேந்திரன் இறந்துவிட்டதாக கூறினார்.

தகவலறிந்த ராஜேந்திரனின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் என்எல்சி நிலக்கரி சுரங்கம் இரண்டாவது நிர்வாக அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்த என்எல்சி அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சு நடத்தினர். அப்போது இறந்த ராஜேந்திரன் குடும்பத்துக்கு இறப்பு நிதி ரூ.15 லட்சம் மற்றும் குடும்பத்தினருக்கு நிரந்தர ஒப்பந்த பணி வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் ராஜேந்திரன் உடலை மந்தாரக்குப்பம் காவல்துறையினர் கைப்பற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தொழிலாளி திடீர் சாவு: என்எல்சி நிர்வாக அலுவலகம் முற்றுகை appeared first on Dinakaran.

Related Stories: