விக்கிரவாண்டி, ஜூன் 1: விக்கிரவாண்டி அருகே ஏரியில் மூழ்கி சிறுவன், சிறுமி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எசாலம் கிராமத்தை சேர்ந்தவர் தாமோதிரன். இவரது மகளின் திருமணம் நாளை(2ம்தேதி) நடக்கிறது. திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக அவரது உறவினர்களான விழுப்புரம் மாவட்டம் ஆனத்தூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் மகன் ஐயப்பன் (9) மற்றும் கடலூர் மாவட்டம் கடலூர் வட்டம் நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகள் தனு (9) ஆகியோர் குடும்பத்துடன் தாமோதிரனின் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று பெருமாள் மற்றும் சுரேஷ் குடும்பத்தினர் திருமண விழாவிற்கு பாத்திரங்கள் வாங்க விழுப்புரம் சென்றிருந்தனர். அப்போது, வீட்டில் இருந்த ஐயப்பன், தனு பக்கத்து வீட்டு சிறுமி கோடீஸ்வரியுடன் ஏரியில் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக தனுஏரியில் கால் வழுக்கி விழுந்துள்ளார். இதை கண்ட சிறுவன் ஐயப்பன் தனுயை காப்பாற்ற ஏரியில் குதித்துள்ளார். இதில் இருவருக்கும் நீச்சல் தெரியாததால், நீரில் அவர்கள் மூழ்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கோடீஸ்வரி ஏரிக்கரையின் மேல் நின்று கூச்சலிட்டு கத்தினார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஏரியின் அருகில் நூறு நாள் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர்.
அப்போது, 2 சிறுவர்கள் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஏரியில் குதித்து அவர்களை மீட்டனர். பின்னர் அவர்களை பரிசோதித்து பார்த்த போது, அவர்கள் இறந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த பெரியதச்சூர் போலீசார் இருவரின் உடலையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகவல் அறிந்த விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி எம்எல்ஏ ஏரியில் மூழ்கி உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். திருமண நிகழ்வில் கலந்து கொள்ள வந்தவர்களின் பிள்ளைகள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post திருமண நிகழ்வுக்கு வந்தபோது சோகம் ஏரியில் மூழ்கி சிறுவன், சிறுமி பலி appeared first on Dinakaran.