முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் அப்போலோவில் தலசீமியாவுக்கு சிகிச்சை: மருத்துவமனை துணைத்தலைவர் ப்ரீதா ரெட்டி தகவல்

சென்னை: அப்போலோ மருத்துவமனை தமிழ்நாடு முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் தலசீமியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அப்போலோ மருத்துவமனை துணைத்தலைவர் ப்ரீதா ரெட்டி தெரிவித்துள்ளார். சென்னையில், அப்போலோ கேன்சர் சென்டர், உலக தலசீமியா மாதத்தை அனுசரிக்கும் விதமாக, தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான உடல்நல காப்பீடு திட்டத்தின் கீழ் தலசீமியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அதிக எண்ணிக்கையில் தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்போடு வெற்றிகரமாக சிகிச்சையளிக்கப்பட்டு வருவது தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது.

இதுகுறித்து அப்போலோ கேன்சர் சென்டரின் குழந்தை மருத்துவவியல், ரத்த புற்றுநோயியல் துறையின் முதுநிலை துறையின் நிபுணர் மருத்துவர் ரேவதி ராஜ் கூறியதாவது: தலசீமியாவால் பாதிக்கப்பட்ட ஏறக்குறைய 165 இளவயது நோயாளிகள், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையின் மூலம் பயனடைந்திருக்கின்றனர் என்றார். அப்போலோ மருத்துவமனை துணைத்தலைவர் பிரீதா ரெட்டி கூறுகையில்: தலசீமியாவால் கடும் சிரமப்பட்ட 400க்கும் மேற்பட்ட சிறார்களுக்கு வெற்றிகரமாக சிகிச்சையளித்திருப்பது அப்போலோ கேன்சர் சென்டருக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பு மற்றும் கவுரவம்.

இவர்களுள் ஏறக்குறைய 40% நோயாளிகளுக்கு முதல்வர் திட்டத்தின் மூலம் கிடைத்த நிதியுதவியைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நபரும் பெறும் வகையில் சர்வதேச தரத்தில் சிறப்பான சுகாதார சேவையை கொண்டுசெல்ல வேண்டுமென்ற அப்போலோவின் செயல்திட்டத்தில் தமிழ்நாடு அரசின் சுகாதார அமைச்சகம் எங்களுக்கு தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவுக்கு நன்றி என்றார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் கோவிந்த ராவ், காப்பீடு திட்டத்தின் இணை இயக்குநர் மருத்துவர் ரவி பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் அப்போலோவில் தலசீமியாவுக்கு சிகிச்சை: மருத்துவமனை துணைத்தலைவர் ப்ரீதா ரெட்டி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: