வாகன தகுதி சான்றிதழ் பெற ரூ. 5,500 லஞ்சம் கடலூர் ஆர்டிஓ அதிரடி கைது: விஜிலன்ஸ் சோதனையில் ரூ. 2.50 லட்சம் சிக்கியது

கடலூர்: கடலூரில் வாகன தகுதி சான்றிதழ் பெற ரூ. 5,500 லஞ்சம் கேட்ட வட்டார போக்குவரத்து அலுவலர், புரோக்கரை போலீசார் நேற்று கைது செய்தனர். கடலூர் அடுத்த பத்திரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி (35). நேற்று முன்தினம் கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் அளித்த புகாரில் எனது நண்பர் செல்வராஜ் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் தொழில் செய்யலாம் என சென்னையில் இருந்து வாகனத்தை வாங்கி வந்தார். பெயர் மாற்றம், தகுதி சான்றுக்காக கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ. 2,050ஐ இணைய வழியில் செலுத்தி ரசீதை பெற்றுள்ளார்.

பின்னர் கடலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் கொடுத்து சான்றிதழ் கோரினார். அப்போது ஆர்டிஓ சுதாகர் ரூ. 5,500 லஞ்சம் கேட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். அதன்படி லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய ரூ. 5,500ஐ வெங்கடாஜலபதியிடம் கொடுத்து அனுப்பினர். அவர் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்று ஆர்டிஓ சுதாகரிடம் கொடுத்தபோது, மறைந்திருந்த போலீசார் சுதாகரையும், அவருக்கு உதவிய புரோக்கர் சிவசங்கர் (எ) குள்ள சிவாவையும் கைது செய்தனர். தொடர்ந்து ஆர்டிஓ அலுவலகத்தில், அதிரடி சோதனை நடத்தி, கணக்கில் வராத லஞ்சப்பணம் ரூ. 2.50 லட்சத்தை கைப்பற்றினர். மேலும் ஆர்டிஓ சுதாகருக்கு சொந்தமான சென்னை மற்றும் கடலூரில் உள்ள வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

The post வாகன தகுதி சான்றிதழ் பெற ரூ. 5,500 லஞ்சம் கடலூர் ஆர்டிஓ அதிரடி கைது: விஜிலன்ஸ் சோதனையில் ரூ. 2.50 லட்சம் சிக்கியது appeared first on Dinakaran.

Related Stories: