தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஜூன் 1ல் மாணவர்களுக்கு பொது கலந்தாய்வு: 2.50 லட்சம் பேர் விண்ணப்பம்; அமைச்சர் பொன்முடி பேட்டி

சென்னை: தமிழகத்தில் உள்ள 164 கல்லூரிகளில் சேர்வதற்காக 2 லட்சத்து 46 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் பொது கலந்தாய்வு வரும் ஜூன் 1ம் தொடங்குகிறது என உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அரசு கலை கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், சென்னை ராணி மேரி கல்லூரி மற்றும் மாநில கல்லூரியில் நடக்கும் கலந்தாய்வை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி நேற்று பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை கல்லூரிகளுக்கு 2 லட்சத்து 46 ஆயிரத்து 295 சேர்க்கை விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஆனால், அரசு கல்லூரிகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்கள் மட்டுமே உள்ளது. சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வில் நேற்று (நேற்று முன்தினம்) வரை 643 மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் அட்மிஷன் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ஜூன் 1ம் தேதி முதல் பொது கலந்தாய்வு தொடங்குகிறது.

இந்த ஆண்டு 15 சதவீதம் கூடுதலாக சேர்க்கை விண்ணப்பங்கள் வந்துள்ளன. புதுமை பெண் திட்டத்தால், மாணவிகளின் விண்ணப்பப்பதிவு அதிகரித்துள்ளது. கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பும் பணி நடந்து வருகிறது. நீதிமன்றத்தில் வழக்கு முடிந்ததும், ஜூன் முதல் வாரத்தில் அதற்கான அப்பணிகள் விரைவுப்படுத்தப்படும். ராணி மேரி கல்லூரியில் கல்லூரி வளாகத்துக்குள் விடுதி அமைத்துத்தர மாணவிகள் விடுத்த கோரிக்கையினை ஏற்று முதலமைச்சர் உத்தரவின் பேரில்43 கோடியில் விடுதி கட்டுமான பணிகள் நடக்கிறது.

* கல்லூரியில் கலைஞர் அரங்கம்
அமைச்சர் பொன்முடி மேலும் கூறுகையில், ‘‘மாநில கல்லூரியில் 2 ஆயிரம் பேர் அமரக்கூடிய கலைஞர் கலை அரங்கம் ரூ.63 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. அதனையும் நாங்கள் பார்வையிட்டோம். பணிகளும் விரைவுப்படுத்தப்பட்டு இருக்கின்றன. மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்காக தங்கும் விடுதிகளும் ரூ.21 கோடியே 6 லட்சம் செலவில் கட்டப்பட்டு வருகின்றன’’ என்றார்.

* ஒரே மாதிரியான மொழி பாடங்கள்
விழாவில் அமைச்சர் பொன்முடி பேசுகையில், ‘‘சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தின் போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார். எல்லா பல்கலைக்கழகங்களிலும் மொழி பாடங்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறோம். அது தொடர்பாகவும், மாநில கல்வி கொள்கையை குறித்து விவாதிக்கவும் துணைவேந்தர்கள், மண்டல இணை இயக்குனர்கள், கல்லூரி முதல்வர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் நாளை (இன்று) நடைபெற உள்ளது’’ என்றார்.

* மாநாட்டில் பங்கேற்பது துணைவேந்தர்களின் விருப்பம்
அமைச்சர் பொன்முடி இறுதியாக பேசுகையில், ‘‘தமிழ்நாடு ஆளுநர், துணைவேந்தர்கள் மாநாட்டை 5ம் தேதி நடத்துகிறார். அதில் கலந்துகொள்வது என்பது துணைவேந்தர்களுடைய தனிப்பட்ட விருப்பம். மாநிலங்கள் மாநில கல்வி கொள்கையை வகுப்பதற்கு முன்னுரிமை உண்டு. தமிழ்நாட்டை போல, கர்நாடகாவிலும் மாநில கல்வி கொள்கை வகுக்கப்பட உள்ளது. இதில் ஆளுநர்கள் கட்டுப்பாட்டோடு இருப்பது நல்லது’’ என்றார் அமைச்சர் பொன்முடி

The post தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஜூன் 1ல் மாணவர்களுக்கு பொது கலந்தாய்வு: 2.50 லட்சம் பேர் விண்ணப்பம்; அமைச்சர் பொன்முடி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: