அகராதியில் இல்லாத வார்த்தைகளை பயன்படுத்தி வசைபாடும் மாஜி இலை அமைச்சர்கள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘ஒரே கட்சியில் ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்கி கொண்ட காலம் போய்… பொதுமேடைகளில் சக முன்னாள் அமைச்சரின் வீக்னஸ் பாயின்ட்ஸ் எடுத்துவிடும் நபர் யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைகட்சியில் சேலம்காரர், தேனிக்காரர் என 2 அணியாக செயல்பட்டு வர்றாங்க. தேர்தல் கமிஷன் ேசலம்காரருக்கு கட்சி சின்னம் ஒதுக்கினாலும் இன்னும் இரண்டு தரப்பிலும் முடிவுக்கு வராத நிலைதான் இருக்காம். இதை உறுதிபடுத்தும் வகையில், இரண்டு அணியிலும் உள்ள மாஜி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஒருவர் மீது ஒருவர் மண்ணை தூற்றி வீசாத குறையாக பேச்சில் படுத்தி எடுக்கிறார்களாம். மனுநீதி சோழன் மாவட்ட இலை கட்சியின் முன்னாள் அமைச்சர் ‘அமைதி’ராஜ் என்ற பெயர் கொண்டவர் சேலத்துக்காரர் அணியிலும், நெற்களஞ்சியம் மாவட்ட முன்னாள் அமைச்சர் வைத்தியானவர் தேனிக்காரர் அணியிலும் இருக்காங்க. நெற்களஞ்சிய மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட சேலம்காரர், தேனிக்காரர் ஆதரவாளரான வைத்தியானவரை ஏகத்துக்கும் தாக்கி பேசிவிட்டு போயிட்டாராம். அந்த செய்தி கேள்விப்பட்டதில் இருந்து வைத்தியமானவருக்கு தலையில் ஒரே மண்டையிடியாம். இதை தணிக்க சேலம்காரர் வந்து சென்றதில் இருந்து மாஜி அமைச்சர்கள் இருவருக்குள் ஒருவரை ஒருவர் வசை மழை பொழிந்து வர்றாங்களாம். ஒரு கட்டத்தில் தரம் தாழ்ந்து வார்த்தைகளை இருவரும் இஷ்டத்துக்கு பயன்படுத்துகிறார்களாம். கடலோர, மனுநீதி சோழன், நெற்களஞ்சிய மாவட்ட இரு அணிகளை சேர்ந்த தொண்டர்கள் 2 அணிகளை சேர்ந்த தலைவர்கள் மீது கடும் அதிருப்தியில் இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கங்கை என்று முடியும் மாவட்டத்துல இலை கட்சிக்காரங்க அதிகாரிகளை கண்டாலே அதிர்ச்சியில் உறைந்து போறாங்களாமே, என்ன காரணம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வடமாநில நதி பெயரில் முடியும் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான கிராபைட் கனிம நிறுவனம் உள்ளது. 1994ல் இயங்க தொடங்கிய இந்த ஆலையில் 900 ஏக்கர் பரப்பளவில் கிராபைட் உள்ளது. ஆண்டுக்கு 65 ஆயிரம் டன் கிராபைட் வெட்டி எடுக்கப்படுகிறது. கடந்த இலைக்கட்சி ஆட்சியில் சுமார் இரண்டு ஆண்டுகள் இந்த ஆலையில் கிராபைட் வெட்டி எடுக்கும் பணி மற்றும் சுத்திகரிப்பு பணி இரண்டும் இல்லாமல் ஆலை முழுமையாக முடக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஒரு டன் கிராபைட் ரூ.70 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த 2020ம் ஆண்டு விடப்பட்ட டெண்டரில் விலையை பாதியாக குறைத்தனர். அப்போது இலைக்கட்சி ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தவரின் தலையீட்டினால், அவரது ஆதரவாளர்கள் டெண்டர் எடுக்கும் வகையில் இதுபோல் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இலைக்கட்சி ஆதரவாளர்கள் கரங்களில் சிக்கிக்கிடக்கும் இந்த ஆலை நாளுக்கு நாள் சரிந்து வரும் நிலையில், ஆலையை மீட்டெடுத்து மறுசீரமைப்பு செய்யும் முயற்சியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. கடந்த காலத்து முறைகேடுகள் குறித்த விசாரணையும் நடக்க இருப்பதால், இதில் பெரும் லாபம் பார்த்து வருகிற இலைக்கட்சிக்காரர்கள் வயிற்றில் புளியை கரைக்கிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கட்சி கூட்டத்தில் ஆஜராகாத கட்சியினரை வறுத்தெடுத்த நபரை பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தமிழ்நாட்டுல இலை கட்சி ஒரு நாளைக்கு முன்னாடி ஆர்ப்பாட்டம் நடத்துனாங்க. அதேபோல வெயிலூர் மாவட்டத்துலயும் தலைநகர்நல ஆர்ப்பாட்டம் நடந்துச்சு. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எப்படியோ முட்டி, மோதி கொஞ்சம் கூட்டத்தை சேர்த்தாங்க. அப்போது, மேடையில இருந்த மாவட்ட முக்கிய நிர்வாகி ஒருத்தரு, மேடையிலயும், மேடைக்கு கீழயும் நின்றிருந்த நிர்வாகிகள் எத்தனைபேர் என்று கண்ணாலேயே கணக்கு போட்டாராம். இதுல பல நிர்வாகிங்க ஆர்ப்பாட்டத்துக்கு வரவே இல்லையாம். இதனால கடுப்பானவரு ஓபன் ஸ்டேஜ்லயே, வராத நிர்வாகிகளோட பெயர்களையே குறிப்பிட்டு, ஆளுங்கட்சியா இருந்தா மட்டும்தான் கட்சி நிகழ்ச்சிகள்ல கலந்துக்கணும், எதிர்க்கட்சியா இருந்தா ஒதுங்கி நிப்பாங்களா.. இருக்கட்டும். யார், யார் இப்படி ஆர்ப்பாட்டம், போராட்டம்னு வரலையோ, அவங்களை கட்டம் கட்டி தலைமைகிட்ட பேசிக்கிறேன்னு, வெயிலைவிட ஓவராவே வறுத்தெடுத்தாராம். அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் சில நிர்வாகிகள், ஏற்கனவே கட்சியில் இருந்து எல்லாரும் கழன்டுகிட்டு போறாங்க. கொளுத்துற வெயில்ல கணக்கெடுப்பதோட ஓபன் மைக்கிலே இப்படி கட்சிக்காரன பேசினா ஒருத்தணும் மிஞ்சமாட்டாங்களேன்னு இலை நிர்வாகிகள் பேசிக் கொண்டே கலைந்து போனாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பெண் அதிகாரியை பணம் கொட்டும் நபராக பார்ப்பது யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘சென்னைக்கு அடுத்தபடியா ரியல் எஸ்டேட் துறையில் கோவை மாநகரம் அபார வளர்ச்சி கண்டு வருகிறது. குறிப்பாக, மாநகர் பகுதியில் கோடிகளை குவிக்கும் ரியல் எஸ்டேட் அதிபர்கள் நிறைய உருவாகிவிட்டனர். மனை அங்கீகாரம், கட்டிட அனுமதி போன்ற பணிகளுக்கான கிராக்கி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்குள்ள, உள்ளூர் திட்டக்குழுமம் அதிகாரி மற்றும் மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரி ஆகியோர் படு பிஸியாகவே இருக்கிறார்கள். இவர்களுக்கு கீழ்நிலையில் உள்ள அதிகாரிகளும் ஒரே பிஸிதானாம். இவர்களில், கோவை மாநகர நகரமைப்பு பிரிவு அதிகாரியை எளிதில் தொடர்புகொள்ள முடியாத அளவுக்கு பிஸி. அதனால், இப்பணியிடத்தை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. தற்போது, இப்பிரிவில் ஒரு பெண் அதிகாரி பணிபுரிகிறார். அவர், மிக விரைவில் பணி ஓய்வுபெற உள்ளார். அதனால், இந்த சீட்டை பிடித்துவிட வேண்டும் என உதவி நகரமைப்பு அலுவலர்கள் 5 பேருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இவர்களில், பெண் அதிகாரி ஒருவர், சீட்டை பிடித்துவிட வேண்டும் என துடியாய் துடிக்கிறார். இதற்காக அவர், செலவு செய்ய தயாராக இருக்கிறாராம். காசு, பணம் முக்கியம் அல்ல, அந்த ‘சீட்’தான் முக்கியம் என்கிறாராம் ‘ஜெய’மான அந்த பெண் அதிகாரி…’’ என்கிறார் விக்கியானந்தா.

The post அகராதியில் இல்லாத வார்த்தைகளை பயன்படுத்தி வசைபாடும் மாஜி இலை அமைச்சர்கள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Related Stories: