மக்கள் பிரச்னைகள் குறித்து கவுன்சிலர்கள் சொல்லும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாநகராட்சி அதிகாரிகளுக்கு மேயர் பிரியா உத்தரவு

சென்னை: மக்கள் பிரச்னைகள் குறித்து கவுன்சிலர்கள் சொல்லும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார்.சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் இன்று காலை நடந்தது. கூட்டத்திற்கு மேயர் பிரியா தலைமை வகித்தார். துணை மேயர் மகேஷ்குமார், ஆணையாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளுக்கு உட்பட்ட பிரச்னை குறைகள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு மேயர் பிரியா பதில் அளித்து பேசினார். இதைத் தொடர்ந்து நேரமில்லா நேரத்தில் 92வது வார்டு திமுக கவுன்சிலர் திலகர் பேசினார். அப்போது அவர், திமுக ஆட்சிக்கு வரும் போது எல்லாம் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் 1988ம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளி கட்டிடம் ஒன்று உள்ளது.

அந்த கட்டிடத்தை புதிதாக கட்டிதர வேண்டும். எனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சென்னை குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான 8 இடங்களில் 20 கிரவுண்டு நிலமும், வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான 10 கிரவுண்ட் இடமும் உள்ளது. இந்த நிலங்கள் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. சிலர் அதை சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர். இதனால், சில அசம்பாவித சம்பவங்கள் நடக்கிறது. எனவே, பயன்பாடற்று கிடக்கும் இந்த நிலங்களை ஏதாவது ஒரு வகையில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மின் வயர்கள் தாழ்வாக செல்வதால் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, அந்த மின் வயர்களை பூமிக்கு அடியில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தவிர்க்க முடியாத பிரச்னை என்று சொன்னால் கிறிஸ்தவ கல்லறை பிரச்னை தான். இங்கு தனிநபர் ஒருவர் உடலை புதைப்பதற்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10,000 வரை வசூல் செய்கிறார். மேலும் இது குறித்து விசாரணை நடத்திய மாநகராட்சி உதவி பொறியாளர் ஒருவரையும் மோசமாக பேசியுள்ளார். எனவே, அந்த நபர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போன்று, இந்த சுடுகாடு 1 ஏக்கர் 40 சென்ட் அளவில் இருந்தது. தற்போது அது ஆக்கிரமிப்பில் சிக்கி ெவறும் 40 சென்டாக குறைந்து விட்டது. எனவே, ஆக்கிரம்பிப்பில் இருந்து மீட்க வேண்டும். மேலும் உடலை புதைக்கவும், எரிக்கவும் 50 ஆயிரம் வரை கேட்கிறார்கள். பூங்காக்களின் ஒப்பந்ததாரர்கள் பழுதாகக்கூடிய உபகரணங்களை சரி செய்வதில் அலட்சியம் காட்டுகிறார்கள். ஒரு சில மாநகராட்சி அதிகாரிகள் வீட்டு உரிமையாளர்களிடம் டிவியேசன் அதிகமாக உள்ளது என கூறி பேரம் பேசுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் வருகிறது. அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதற்கு பதில் அளித்து மேயர் பிரியா பேசுகையில், ” சின்ன சின்ன இது போன்ற பிரச்னைகளை எல்லாம் அந்தந்த மண்டல அளவிலேயே மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்து பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். அவ்வாறு சரி செய்யாத சூழ்நிலையில் கவுன்சிலர்கள் திரும்ப திரும்ப மன்றத்தில் குற்றச்சாட்டு வைக்கின்றனர். இது சரியாக வராது. எனவே, கவுன்சிலர்கள் சொல்லும் புகார்கள் மற்றும் குறைகள் மீது குறைகள் மீது மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சுடுகாட்டு பிரச்னை பற்றி உறுப்பினர் கூறினார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சுடுகாடுகளில் உடல்களை புதைக்க பொதுமக்களுக்கு இலவசம் என்று அறிவிக்கப்பட்டு போடு வைத்துள்ளோம். ரூ.20,000, ரூ.30000 வாங்குவதாக உறுப்பினர் கூறியுள்ளார். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் கவுன்சிலர்கள் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சுடுகாட்டில் புதைப்பது, எரிப்பது தொடர்பான நடைமுறைகளை ஆன்லைன் முறையில் கொண்டு வருவது தொடர்பாக பரிசீலனை உள்ளது.

இதை தொடர்ந்து 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் முக்கிய தீர்மானங்கள் வருமாறு: அடையாறு காந்தி நகர் கால்வாய் கரை சாலையில் புதிதாக பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவிற்கு தமிழ் மக்களின் சமூக நீதியை வென்றெடுத்து மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன், சமத்துவமாக வாழ்வதற்கு தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தலைவர் கலைஞரின் நினைவை போற்றும் வகையில் கலைஞர் மு.கருணாநிதி பூங்கா என்று பெயர் வைக்க தீர்மானம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் ஆணையாளரின் பரிந்துரையை ஏற்று அரசு அனுமதி அளிக்கப்பட்டதால் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி என்று பெயர் சூட்டுவதற்கு மன்றத்தின் அனுமதி வேண்டி சமர்ப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ெசன்னை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களை 4 குழுக்களாக பிரித்து அந்த குழுக்களுக்கு அரக்கு பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய 4 வண்ணங்களில் ரூ.85 லட்சத்தில் டீசர்ட் வழங்கப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிதாக தூய்மை பணியாளர்கள் நியமிக்க நடவடிக்கை
மாநகராட்சி மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் தூய்மை பணியாளர்கள் ஓய்வு குறித்து பேசினர். இதற்கு பதில் அளித்து ஆணையர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், ” சென்னை மாநகராட்சியில் தற்போது 10 மண்டலங்களில் தனியார் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 5 மண்டலங்களில் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவற்றில் 500 தூய்மை பணியாளர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஓய்வு பெற உள்ளனர். எனவே, காலியாகும் தூய்மை பணியாளர்களின் எண்ணிக்கை அடிப்படையிலும், புதிதாக தூய்மை பணியாளர்களை நியமனம் செய்வது தொடர்பாகவும் அனைத்து மன்ற உறுப்பினர்கள் மற்றும் மேயர், துணை மேயருடன் ஆலோசனை நடத்தி ஆய்வுகள் நடத்தி புதிய பணியாளர்களை தேவைக்கு ஏற்ப நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

The post மக்கள் பிரச்னைகள் குறித்து கவுன்சிலர்கள் சொல்லும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாநகராட்சி அதிகாரிகளுக்கு மேயர் பிரியா உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: