என்இசி பியூச்சர் கிரியேஷன் ஹப் மையமானது, சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு வசதியாக, ஊடாடும் உரையாடல்கள் மற்றும் நேரடி அனுபவங்கள் மூலம் தொழில்நுட்பமும் வணிகமும் ஒன்றிணையும் இடமாகும். சமூகப் பிரச்னைகளைத் தீர்க்கும் தொழில்நுட்பத்தை உருவாக்குவது முதல், செயற்கை நுண்ணறிவு மற்றும் பயோமெட்ரிக் அங்கீகார தொழில்நுட்பங்களின் வளர்ச்சி வரை புதிய மதிப்பை உருவாக்கி வருகிறது. என்இசி பியூச்சர் கிரியேஷன் மையத்திற்கு சென்று பார்வையிட்ட முதல்வரிடம், விமான நிலையங்களில் மின்னணு சுங்க அறிவிப்பு வாயில் மூலமாக முக அங்கீகார தொழில்நுட்பம், வேகமான சுங்க அனுமதி, நெரிசலற்ற சுங்க ஆய்வு தளங்கள், காத்திருப்பு நேரத்தை குறைத்தல் ஆகிய மனஅழுத்தம் இல்லாத விமான பயணத்தை மேற்கொள்வதற்கான நடைமுறை வழிமுறைகள் குறித்து மைய உயர் அலுவலர்கள் விளக்கினார்கள். இந்த அதிநவீன விமான பயண முறை உலகின் பரபரப்பான விமான நிலையமான அட்லாண்டா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விமான நிலையங்களிலும் செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தனர்.
என்இசி நிறுவனம், துறைமுக கண்காணிப்பு, தொழிற்சாலை மேலாண்மை, ரயில் போக்குவரத்து மேலாண்மை தொடர்பு, சாலை போக்குவரத்து மேலாண்மை, தீயணைப்பு அமைப்புகள், தகவல் தொடர்பு அமைப்புகள், விமான போக்குவரத்து கட்டுப்பாடு, வங்கி ஏடிஎம்கள், டிஜிட்டல் தொலைக்காட்சி பரிமாற்றம், மின்னணு அரசாங்கம், நீர் மேலாண்மை, செயற்கைக்கோள் தகவல் தொடர்பு போன்ற கடல் முதல் விண்வெளி வரை அனைத்து நிர்வாகத்திலும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தீர்வு கண்டு வருவதைப் பற்றி தமிழ்நாடு முதலமைச்சரிடம் விளக்கப்பட்டது. இந்த மையத்தை பார்வையிட்ட நிகழ்வில், மைய உயர் அலுவலர்களுடன், தமிழ்நாட்டிற்கான முக அங்கீகார செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங் நோக்கம், தமிழ்நாடு அரசின் நிர்வாகத்திலும், பொது பயன்பாட்டு வசதிகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினை பயன்படுத்துவது குறித்து முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிகழ்வின்போது, தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, செயலாளர் கிருஷ்ணன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விஷ்ணு, என்இசி பியூச்சர் கிரியேஷன் மைய உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post டோக்கியோவில் என்இசி பியூச்சர் கிரியேஷன் மையத்தை பார்வையிட்டார்; தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.