கெண்டிரச்சேரி கிராமத்தில் உள்ள கிணற்றை சீரமைத்து தர வேண்டும்: தண்ணீரை ஆய்வு செய்யவும் கோரிக்கை

மதுராந்தகம்: கெண்டிரச்சேரி கிராமத்தில் பழமையான கிணற்றை சீரமைத்து தரவேண்டும். மேலும், கிணற்றில் உள்ள தண்ணீர் பயன்பாட்டிற்கு தகுதியானதா என சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மதுராந்தகம் அடுத்த கெண்டிரச்சேரி கிராமத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கிராம மக்களின் தேவைக்காக அமைக்கப்பட்ட குடிநீர் கிணறு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை பயன்பாட்டில் இருந்து வந்தது. ஆனால், தற்போது தமிழக அரசின் பல்வேறு குடிநீர் மேலாண்மை திட்டங்களின் வாயிலாக கிணறுகளில் மக்கள் கயிறு கட்டிய பக்கெட் மூலமாக தண்ணீர் எடுத்துச் செல்லும் நிலை குறைந்து போய்விட்டது.

குறிப்பாக, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளின் மூலமாக கிராமத்தின் பல பகுதிகளிலும், சாலை ஓரங்களிலும் குடிநீர் இணைப்புகள் தரப்பட்டு தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி வீடுகள் தோறும் குடிநீர் இணைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, பொதுமக்கள் கிணறுகளுக்கு சென்று ராட்டினங்கள் உதவியுடன் பக்கெட் மூலம் தண்ணீர் எடுக்கும் நிலை முழுவதும் மாறிப் போய்விட்டது. இதனால், இந்த கிராமத்தில் உள்ள இந்த பழைய குடிநீர் கிணறு தற்போது பயனற்ற நிலையில் உள்ளது. இந்த கிணறு அமைந்துள்ள பகுதியில்தான் அரசு ஆரம்பப் பள்ளியும் செயல்பட்டு வருகிறது.

விளையாட்டுத்தனமாக மாணவர்கள் இந்த கிணற்றுப்பகுதியில் வந்து விளையாடும்போது பாதிப்புகள் ஏற்படலாம். எனவே, அவர்களின் நலன் கருதி இந்த கிணற்றின் மேல் பகுதியில் இரும்பு கம்பி வலைகள் கொண்டு மூடி வைக்கலாம். இதன் மூலமாக எவ்வித பாதிப்புகளும் ஏற்படாமல் தடுக்க முடியும். மேலும், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் இந்த கிணற்றினை ஆய்வுசெய்து மேலும் இந்த கிணறு மக்கள் பயன்பாட்டிற்கு தகுதியானதா? அல்லது அகற்றப்பட வேண்டியதா? என்பதை ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

The post கெண்டிரச்சேரி கிராமத்தில் உள்ள கிணற்றை சீரமைத்து தர வேண்டும்: தண்ணீரை ஆய்வு செய்யவும் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: