மானியம் குறைக்கப்படுவதால் எலக்ட்ரிக் டூவீலர்கள் விலை ஜூன் 1ம் தேதி முதல் உயர்கிறது

பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக எலக்ட்ரிக் வாகனங்கள் பிரபலமாகி வருகின்றன. ஒரு சில எலக்ட்ரிக் டூவீலர்கள் திடீரென தீப்பிடித்து எரிவது வாடிக்கையாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வந்தாலும், எரிபொருள் சிக்கனம் கருதி பலர் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். இதை மேலும் ஊக்குவிக்கும் வகையில் பேம் திட்டத்தின் கீழ் அரசு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

ஒன்றிய அரசின் பேம் 2 திட்டம், 2019 ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு வந்தது. பின்னர், வரவேற்பை கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் நீட்டிக்கப்பட்டு வந்தது. நடப்பு நிதியாண்டு வரை அதாவது, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை இந்தத் திட்டம் அமலில் இருக்கும். ஒரு கிலோவாட் அவருக்கு ரூ.10,000 வீதம் மானியம் வழங்கப்பட்டது. ஆனால், வாகனத்தின் ஷோரூம் விலையில் அதிகபட்சம் 20 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்த மானியம் கிலோவாட் அவருக்கு ரூ.15,000 எனவும், அதிகபட்ச மானியம் ஷோரூம் விலையில் 40 சதவீதம் எனவும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், இந்த மாதம் கனரக தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், எலக்ட்ரிக் டூவீலர்களுக்கான மானியம் கிலோவாட் அவருக்கு ரூ.15,000 என்பதில் இருந்து மீண்டும் ரூ.10,000 ஆக நிர்ணயிக்கப்படுவதாகவும், அதிகபட்ச மானியமானது ஷோரூம் விலையில் 15 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

முதலில் பேம் 2 திட்டம் அறிமுகம் செய்தபோது வழங்கப்பட்ட மானியத்தை விட இது குறைவாகும். உதாரணமாக, எலக்ட்ரிக் டூவீலரின் ஷோரூம் விலை ஒரு லட்சம் ரூபாய் என்றால், அதற்கு பேம் டூ திட்டத்தின் கீழ் அதிகபட்ச மானியமாக முன்பு ரூ.40,000 கிடைத்து வந்தது. இனி இந்த மானியம் ரூ.15,000 ஆக குறைந்து விடும். எனவே, எலக்ட்ரிக் டூவீலர் வாங்குபவர்கள் கூடுதலாக ரூ.25,000 வரை செலவிட வேண்டிவரும்.

ஒன்றிய அரசின் இந்த முடிவு, மின்சார வாகனம் வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள் மத்தியிலும், வாகன உற்பத்தியாளர்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தில் முதலீடு செய்துள்ள நிறுவன டூவீலர்களின் விலையில் இந்த மானிய குறைப்பு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் கூறப்படுகிறது.

The post மானியம் குறைக்கப்படுவதால் எலக்ட்ரிக் டூவீலர்கள் விலை ஜூன் 1ம் தேதி முதல் உயர்கிறது appeared first on Dinakaran.

Related Stories: