உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகம்; அரசாணை வந்தாச்சு

இந்த ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அறிவிப்புக்கு மேலும் மகுடம் சூட்டும் வகையில் தற்போது தமிழகத்தில் உள்ள உழவர் சந்தைகளில் தொன்மை சார்ந்த உணவகம் அமைக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாறிவரும் உணவுப்பழக்கத்தால் மனித சமுதாயம் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறது. நீரிழிவு, புற்றுநோய், இதயநோய் உள்ளிட்ட பல நோய்கள் இப்போது சிறு வயதினரையும் தாக்கி வருகிறது. இதனால் பலர் பழைய வாழ்வியல் முறைகளுக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக உணவுப் பழக்கத்தை மாற்றவும் முயன்று வருகிறார்கள்.

நாம் மறந்துபோன தினை, வரகு, சாமை உள்ளிட்ட சிறுதானியங்கள் இப்போது மீண்டும் புழக்கத்திற்கு வருகிறது. இதன் உச்சமாக இந்த 2023ம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்திருக்கிறார்கள். இதனால் பல இடங்களில் சிறுதானியங்களை வைத்து விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சிறுதானியங்களின் மகத்துவத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள 25 உழவர் சந்தைகளில் தொன்மைசார் உணவகம் அமைக்க ஓர் அட்டகாச ஏற்பாட்டை செய்திருக்கிறார்கள்.

கடந்த மார்ச் மாதம் தமிழக சட்டமன்றத்தில் வேளாண்மைக்கென பட்ஜெட் தாக்கல் செய்தபோது, 25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு இப்போது செயல்பாட்டுக்கு வரத் தொடங்கிவிட்டது. ஆமாம். அந்த அறிவிப்பை செயல்படுத்த அரசாணை பிறக்கப்பட்டுள்ளது. அதில் சிறுதானிய கூழ், மூலிகை சூப் உள்ளிட்ட உணவுப்பொருட்களை விற்பனை செய்து மக்களுக்கு சிறுதானிய உணவுகளின் மகத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் எனவும், முதல்கட்டமாக கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இந்த உணவகம் அமைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இதேபோல மதுரை, நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தேனி, திருப்பூர், திருச்சி, வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் தொன்மைசார் உணவகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிகாலை 4 மணி முதல் மதியம் 1 மணி வரை இயங்கும் இந்த உணவகங்களுக்கு இலக்கிய நயம் சார்ந்து பெயர்கள் வைக்கப்படும், உணவகத்தில் புவிசார் குறியீடு பெற்ற உணவுப்பொருட்களையே விற்பனை செய்ய வேண்டும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் டம்ளர் உள்ளிட்டவற்றுக்கு நாட் அலவுட் கூறியிருக்கிறது.

The post உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகம்; அரசாணை வந்தாச்சு appeared first on Dinakaran.

Related Stories: