குறிஞ்சிப்பாடி அருகே பரபரப்பு இரு தரப்பினர் பயங்கர மோதல் மினி லாரி, 2 பைக்குகள் உடைப்பு

வடலூர், மே 30: குறிஞ்சிப்பாடி அருகே இரு தரப்பினர் இடையே நடந்த மோதலில் ஒரு தரப்பினர் ஆயுதங்களுடன் வந்து தாக்கியதில் பெண் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 40 பேர் மீது வழக்குப் பதியப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே கல்குணம் கிராமம் மற்றும் வரதராஜன்பேட்டை கிராமம் உள்ளது. இரண்டு கிராமங்களிலும் உள்ள இருவேறு சமூகத்தினர் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கல்குணம் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன், விக்னேஷ் ஆகியோர் பைக்கில் குறிஞ்சிப்பாடிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினர்.

வரதராஜன்பேட்டை நீலகட்டிக்குளம் என்ற இடத்தில் வந்தபோது, அதே ஊரைச்சேர்ந்த மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த சசிதரன், குணால், வீரமணி ஆகியோர் சிலம்பரசன் பைக்கை வழிமறித்து நீங்கள் யார்?, எந்த ஊர்? எனவும், இந்த ஊர் வழியாக ஏன் வருகிறீர்கள் எனவும் கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டு வழிமறித்தவரை தாக்கினர். தகவலறிந்த மக்கள் கையில் கழி, கட்டை, இரும்புக்கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கல்குணம் கிராமத்துக்கு சென்று இரண்டு இளைஞர்களையும் தாக்கி உள்ளனர். அதனை தடுக்க முயன்ற ஒரு பெண் உள்பட 4 பேருக்கும் அடி விழுந்தது. மேலும் அங்கு நிறுத்தப் பட்டிருந்த மினிலாரி, இரண்டு பைக்குகள் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர்.

இந்த தாக்குதலில் பெண் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்து கடலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வரதராஜன்பேட்டை பெருமாள்கோவில் தெருவைச் சேர்ந்த சுரேன் (36) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கல்குணம் கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன், விக்னேஷ், அரவிந்த், சேதுபதி, தினேஷ், தமிழ்முரசு, திருமூர்த்தி, ராமர், ஆகாஷ் உள்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தரப்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் கல்குணம் மாதா கோவில் தெருவை சேர்ந்த சண்முகம் அளித்த புகாரின் பேரில் வரதராஜன்பேட்டையை சேர்ந்த சுரேன், புஷ்பராஜ், வீரமணி, பிரசாந்த், தாத்தா என்கிற ராஜசேகர், டோனி, பிரகாஷ், சிலம்பரசன் உள்பட 20 ேபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 2 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். இரு தரப்பினர் இடையே நடந்த மோதலில் 6 பேர் படுகாயம் அடைந்து, 9 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறிஞ்சிப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கும் வகையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post குறிஞ்சிப்பாடி அருகே பரபரப்பு இரு தரப்பினர் பயங்கர மோதல் மினி லாரி, 2 பைக்குகள் உடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: