செல்லப்பிராணி வளர்க்குறீங்களா… விரைவில் வருகிறது புதிய சட்டம்: ஆண்டுக்கு ₹50 செலுத்தி ஆன்லைனில் கட்டாய பதிவு; சென்னை மாநகராட்சி முடிவு

இந்த சட்டம் இன்னும் 2, 3 வாரங்களில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சென்னை: வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் ஆண்டுக்கு ₹50 செலுத்தி ஆன்லைனில் கட்டாய பதிவு செய்யும் புதிய சட்டத்தை விரைவில் அமல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.சென்னை மாநகராட்சி சார்பில் வீட்டில் வளர்க்கக்கூடிய செல்லப் பிராணிகளுக்கு இலவசமாக சிகிச்சை, வெறிநாய் தடுப்பூசி போன்றவை போடப்படுகிறது. இதற்காக திரு.வி.க. நகர், நுங்கம்பாக்கம், கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம் ஆகிய 4 இடங்களில் இதற்கான மருத்துவமனைகள் உள்ளது. இங்கு வெறிநாய் தடுப்பூசி உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்ப்பதற்கு மாநகராட்சியிடம் உரிமம் பெற வேண்டும். அதற்காக ஆண்டுக்கு ஒரு முறை ₹50 கட்டணம் செலுத்தி அதை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஆனால் பெரும்பாலானவர்கள் இதை முறையாக பின்பற்றுவது இல்லை. இதனால் வீட்டில் வளர்க்கக் கூடிய செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகள் குறித்த சரியான புள்ளி விவரங்கள் சென்னை மாநகராட்சிக்கு கிடைக்கவில்லை. ஆனால் 1,500 செல்லப்பிராணிகள் மட்டுமே சென்னையில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் கிடைத்துள்ளது.

இதையடுத்து நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள் வீடுகளில் எத்தனை உள்ளன என்ற முறையான புள்ளி விவரம் இல்லாததால் அவற்றை ஒழுங்குபடுத்தும் புதிய திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சி இணையதளத்தில் வீடுகளில் வளர்க்கக்கூடிய செல்லப்பிராணிகள் குறித்த விவரங்களை பதிவு செய்யும் நடைமுறை பணிகள் 90 சதவீதம் முடிந்து விட்ட நிலையில் இந்த சட்டம் இன்னும் இரண்டு, மூன்று வாரங்களில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்

படுகிறது. இச்சட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் ஆன்லைனில் நாய் வளர்ப்போரின் பெயர், அடையாள அட்டை, நாய் போட்டோ, தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் போன்றவற்றை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது தவிர செல்லப் பிராணிகளுக்கான தனியார் கிளினிக், கடைகள், நாய் இனவிருத்தி செய்யக் கூடியவர்களும் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளனர். அவர்களும் தங்கள் பெயர், கடை, வீடு போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும். அதன்படி ஆன்லைன் மூலம் அனைத்து விவரங்களையும் சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் வழியாக பதிவு செய்யும் முறை நடைமுறைத்தப்படுத்தப்பட்டால் செல்லப்பிராணிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து உரிமம் வழங்கப்படும். மேலும் நாய், பூனை வளர்ப்போரின் முழுமையான விவரமும் மாநகராட்சிக்கு தெரியவரும் என்று அதிகாரிகள் கூறினர்.

The post செல்லப்பிராணி வளர்க்குறீங்களா… விரைவில் வருகிறது புதிய சட்டம்: ஆண்டுக்கு ₹50 செலுத்தி ஆன்லைனில் கட்டாய பதிவு; சென்னை மாநகராட்சி முடிவு appeared first on Dinakaran.

Related Stories: