தாமரை மக்கள் பிரதிநிதி தொகுதியில் இருக்கும் மக்களை கரன்சிக்காக சுற்றவிடும் அதிகாரிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘புல்லட்சாமி நிதியை மக்கள் பெறுவதற்கு முட்டுகட்டை போடும் அதிகாரிகள் யாரு…’’ என்று கேள்வி எழுப்பினார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் வகையில் மருத்துவ உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகைகள் முதல்வர் நிவாரண நிதி மூலம் வழங்கப்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் தொகுதியை சேர்ந்தவர்களுக்கு உதவித்தொகைக்காக பரிந்துரை செய்கின்றனர். ஆனால் பல மாதங்களாக இதனை கிடப்பில் போடுகிறார்களாம். அதே நேரத்தில் முதல்வர் அலுவலகத்தில் வேலை செய்யும் அமுதுவும், கணக்குப்பிள்ளை உதயும் சேர்ந்து கொண்டு இந்த விஷயத்தில் முடிவு எடுக்கிறார்களாம்.

எம்எல்ஏ நிவாரண நிதி கேட்டு, வரும் விண்ணப்பங்களை சுத்தலில் விடுகிறார்களாம். குறிப்பாக தாமரை சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகள் என்றால், அவ்வளவு சீக்கிரம் கிடைக்காதாம். முதல்வர் நிவாரண நிதியை, தங்களது சொந்த நிதியை செலவு செய்வது போல ஆக்டிங் கொடுக்கிறார்களாம். இதில் முறைகேடு நடப்பதாக அனைத்து மட்டத்திலும் பரவலாக பேச்சு அடிபட்டு வருகிறது. புல்லட்சாமியின் எம்எல்ஏக்கள் இல்லாத தொகுதிகளில் கட்சியை பலப்படுத்த முதல்வர் நிவாரண நிதி வழங்கி மக்களை கவர வேண்டும் என கட்சிக்காரர்கள் நினைக்கிறார்களாம், அதற்கும் முட்டுக்கட்டை போடுவதால் புல்லட்சாமி கட்சிக்காரர்களே அவருக்கு எதிராக கம்பு சுத்துகிறார்களாம். முதல்வர் புல்லட்சாமிக்கு தெரிந்தும், அமைதி காத்து வருகிறார்.

அவர் எப்போது வேண்டுமானாலும் தனிஅதிகாரி மற்றும் கணக்காளரை மாற்றிவிடுவார் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு ஓடுது…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கமிஷனர் வைத்த ‘செக்’ காரணமாக தலைதெறிக்க ஓடும் புரோக்கர்களை பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாநகராட்சியில ஒப்பந்த பணிக்கு கடும் போட்டியாம். அதனால, ஒப்பந்த பணிக்கு கரன்சி எதிர்பார்த்து ஒரு குரூப் செயல்படுதாம். இந்த குரூப் நாங்கதான் டெண்டரை முடிவு செய்வோம்ன்னு அடிச்சு விடுறாங்க. இந்த குரூப்புக்கு போட்டியாக, இன்னொரு குரூப் முகாம் போட்டுள்ளதாம். இவங்க கார்ப்பரேஷன் டெண்டர் எங்க கையிலதான் இருக்கு என இன்னொரு பக்கம் வெயிட் காட்டுறாங்க. தார்ச்சாலை, சாக்கடை கால்வாய், மழைநீர் வடிகால் என பல வேலைகளுக்கு டெண்டர் போடுறவங்க இந்த இரண்டு குரூப்புக்கும் இடையே சிக்கி தவிக்கிறாங்களாம்.

சில இடங்களில் வேலை துவங்க ஒர்க் ஆர்டர் வரும்போது, இது நாங்க தந்த ஒர்க் ஆர்டர்தான் என 2 குரூப்பும் தகவல் சொல்லி கான்டிராக்டரை டார்ச்சர் பண்றாங்களம். இதனால கான்ட்ராக்ட் எடுத்தவர்கள் தலைசுத்தி போய் தவிக்கிறாங்க. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் மாநகராட்சி டெண்டர்ல புரோக்கர்கள் தலையீடு இருக்காம். சிவில் வேலை, ரோடு வேலை… என தரம் பிரித்து அதற்கு ஏற்ப சம்திங் கொடுங்கன்னு கேட்டு தொந்தரவு கொடுக்கிறாங்க. இந்த விவகாரம் மாநகராட்சி கமிஷனர் கவனத்துக்கு கொண்டு போனாங்களாம். அவர், நியாயமாக, அரசு விதிமுறைப்படி எப்படி டெண்டர் விட வேண்டுமோ, அப்படித்தான் டெண்டர் விடுவோம், புரோக்கர்கள் யாரும் உள்ளே வந்து வாலாட்ட முடியாதுன்னு வலுவாக ‘‘செக்’’ வைத்து விட்டாராம். இதனால், புரோக்கர் கூட்டம் திணறிக்கொண்டு இருக்கிறதாம். என்றார் விக்கியானந்தா.

‘‘வெயிலூர் மாவட்டத்துல தேர்வு எழுதுனதுக்காக ஒருவரை கைது செய்ய ேபாலீஸ் தேடுதா… என்ன விஷயம் நடந்தது…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தமிழ்நாட்டுல, டிஎன்பிஎஸ்சி தேர்வு சில நாளைக்கு முன்னாடி நடந்துச்சு. அதேபோல வெயிலூர் மாவட்டத்துலயும் 10 சென்டர்கள்ல தேர்வு மையமாம். ஆயிரம் பேருக்கு மேல இந்த தேர்வ எழுதினாங்க. இதுல காட்டுப்பாடி கவர்மென்ட் பெண்கள் ஸ்கூல்ல 50 பேர் வரைக்கும் தேர்வு எழுத வந்தாங்க. இந்த மையத்தின் பக்கம் இருக்கும் வி என்ற எழுத்துல தொடங்கி, பட்டு என்று முடியுற ஊரைச் சேர்ந்த வாலிபர் ஒருத்தரு காதுல கட்டு போட்டுகிட்டு, தேர்வு எழுத வந்திருக்காரு. அவரை பார்த்ததும், என்னப்பா, காதுல கட்டுன்னு கேட்டிருக்காங்க. தேர்வு அலுவலருகிட்ட, அடிபட்டுடிச்சுன்னு அழுதபடி சொல்லியிருக்காரு.

தேர்வு தொடங்குன, கொஞ்ச நேரத்துலயே, காதுல கை வெச்சிகிட்டு, இருந்திருக்காரு, அந்த வாலிபரு. தேர்வு அலுவலரும், காதுல வலி வந்திருக்குது போலன்னு இருந்திருக்காங்க. திரும்பவும், யார்கிட்டயோ பேசுறமாதிரி சத்தம் கேட்டிருக்குது. சந்தேகப்பட்டு, காதுல இருந்த கட்டை பிரிச்சு பார்த்த வங்க… அதிர்ச்சியாகிட்டாங்களாம். காரணம், காதுல புளூடூத் இயர் பட்ஸ் வெச்சி, கேட்டு, கேட்டு தேர்வு எழுதி கொண்டிருந்தாராம். உடனே, அந்த வாலிபரை வெளியேற்றியிருக்காங்க. ஆசிரியர்கள், வெளியில் நின்ற போலீஸ்காரர்களையும் ஏமாற்றினாராம். இதனால அந்த நபர் மேலே கேஸ் போட்டு போலீசார் தேடி வர்றாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தூங்கா நகரில் அரசு அதிகாரிகள் பயந்து ஓடும் அளவுக்கு பெரிய அதிகாரி யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘நுகர்வோர் அமைப்பு என்றால், பொதுமக்களுக்கு தேவையானவற்றை அரசு அலுவலர் மூலம் பெற்றுத்தர வேண்டும். நுகர்வோருக்கு உதவி செய்வதுதான் இதன் நோக்கம். ஆனால், மதுரையில் ஒரு நுகர்வோர் அமைப்பின் நிர்வாகி, கலெக்டர் முதல் கீழ் உள்ள அதிகாரிகள் வரையிலும் பழக்கம் வைத்துள்ளாராம். அவர் வருவாய்த்துறை, குடிமைப்பொருள் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, உள்ளூர் திட்டக்குழுமம், நகர்ப்புற வளர்ச்சித்துறை என அனைத்து துறையிலும், நுகர்வோர் அமைப்பு என பெயர் கூறி, அரசு அதிகாரிகளிடம் வசூல் வேட்டை நடத்தி வருகிறாராம்.

சென்னையில் அந்த ஐஏஎஸ் அதிகாரியை தெரியும், இவரை தெரியும் எனக்கூறி, டிரான்ஸ்பர் உத்தரவு வாங்கி தருகிறேன், உங்களின் பிரச்னைகளை தீர்க்கிறேன் என கூலாக பேசி, அரசு அலுவலர்களிடம் லட்சக்கணக்கில் கறந்து விடுகிறாராம். அதிகாரிகளை நம்புவதை விட இவரிடம் காரியத்தை கூறி, கொடுக்க வேண்டியதை கொடுத்து சாதித்துவிடலாம் என அரசு ஊழியர் கும்பல் இவரை வட்டமிட்டு வருகிறதாம்.

இதனை பயன்படுத்தி, இந்த நிர்வாகி தவறு செய்யும் அதிகாரியிடம் மாவட்ட நிர்வாகத்திடம் உங்களை போட்டு கொடுத்துவிடுவேன் என மிரட்டி, மாத மாமூல் வாங்குகிறாராம். இவரின் பேச்சை நம்பி, முன்னாள் மாவட்ட அதிகாரி பலபேரை இடமாற்றம் செய்து நடவடிக்கையும் எடுத்திருக்கிறாராம். மதுரையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியை கண்டு பயப்படாத அரசு அலுவலர்கள் கூட, இவரை கண்டால் பணம் கறக்க வந்துவிட்டான் எனக்கூறி ஓட்டம் பிடிக்கின்றனராம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post தாமரை மக்கள் பிரதிநிதி தொகுதியில் இருக்கும் மக்களை கரன்சிக்காக சுற்றவிடும் அதிகாரிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Related Stories: