தொடரட்டும் சாதனை

தரை, வான், கடல்வழி போக்குவரத்தை துல்லியமாக கண்காணிக்கும் செயற்கை கோளுடன் ஜிஎஸ்எல்வி எப்-12 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. முதன் முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணுக்கடிகாரமும் இந்த செயற்கை கோளில் பயன்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் மட்டுமே சொந்த நேவிகேசன் அமைப்புகளை கொண்ட நாடுகளாக இருந்தது. இனி இந்தியாவும் இந்த செயற்கை கோளை நிலை நிறுத்துவதன் மூலம் அந்த பெருமையை அடைய உள்ளது.

அறிவியலில் புதிய கண்டுபிடிப்பு மற்றும் புதிய தொழில்நுட்பத்தில் வல்லரசு நாடுகளுக்கு சவால் விடும் வகையில் நமது விஞ்ஞானிகள் சாதனை படைத்து வருகின்றனர். நாடு வல்லரசு என்ற இலக்கை அடைய வேண்டும் என்றால், அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகள் நமக்கு கட்டாயம் தேவை. புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதில் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அதீத தீவிரம் காட்டி வருகின்றனர். இது வரவேற்க வேண்டிய விஷயம். தற்போது விண்ணில் ஏவப்பட்டுள்ள ஜிஎஸ்எல்வி-எப் 12 ராக்கெட், பேரிடர் காலங்களில் துல்லியமான தகவல்களை தெரிவிக்கும்.

இதனால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உள்ள மக்களை எளிதாக அங்கிருந்து வெளியேற்ற முடியும். மீட்பு பணிகளுக்கு வீரர்களையும் முன்கூட்டியே தயார் செய்ய முடியும். இந்த செயற்கைகோள் மூலம் நிலத்திலும், கடற்பரப்பிலும் பயணிக்கும் இடத்தையும், தொலைவையும் மிக துல்லியமாக கணிக்க முடியும். இதுபோன்ற துல்லிய கணிப்புகள் நமக்கு தேவை. அவசர காலங்களில் நாட்டின் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு பகுதிக்கு கடல் வழியாக எவ்வளவு நேரத்தில் செல்ல முடியும் என்பதை முன்கூட்டியே கணித்து எளிதாக செல்ல முடியும்.

முக்கியமாக, போர் போன்ற சூழ்நிலை ஏற்பட்டாலும் கடற்படைகளை கடல் வழியாக கொண்டு செல்லவும் மற்றும் போர் கப்பல்கள் எவ்வளவு நேரத்தில் இலக்கை அடைய முடியும் என்பதையும் இந்த செயற்கைகோள் மூலம் தெரிந்து கொள்ளலாம். கடந்த காலங்களை விட தற்போது பேரிடர் அதிகளவு ஏற்படுகிறது. பேரிடர் ஏற்படும் முன் கச்சிதமாக கணித்தால் உயிரிழப்புகளை கணிசமாக தடுக்க முடியும். மலைப்பிரதேசங்களில் ஏற்படக்கூடிய திடீர் பேரிடர்களால் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. மீட்பு பணிகளிலும் தொய்வு ஏற்படும் சூழல் இருந்து வருகிறது.

இனி பேரிடர் காலங்களில் துல்லிய தகவல்கள் கிடைப்பதன் மூலம் பேரிடர் கால இழப்புகளை வெகுவாக குறைக்க முடியும். வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்க வேண்டியது மிக அவசியம். நாளுக்கு நாள் வான்வெளி போக்குவரத்தும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில், ஏற்படக்கூடிய சிக்கல்களால் குறிப்பிட்ட நேரத்திற்குள் விமானம் செல்ல முடியாத நிலை இருக்கிறது. இனி, இதுபோன்ற நிலை இருக்காது. புதிய கண்டுபிடிப்புகள் நாட்டிற்கு தேவையாக உள்ளது. எந்த ஒரு விஷயத்திலும் பிறநாட்டை நம்பி இருக்க வேண்டியது இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டியது கட்டாயம்.

அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளில் மற்ற நாடுகளின் தேவையை படிப்படியாக குறைத்துக்கொண்டே வர வேண்டும். இனி வரும் காலங்களில் முழுவதும் நம்முடையதாக இருக்க வேண்டும். பிற நாடுகளுக்கு நாம், அறிவியல் தொழில்நுட்பத்தில் அறிவுரை வழங்க வேண்டும். அறிவியலில் நம்மால் சாதிக்க முடியும். அறிவியலில் கண்டுபிடிப்புகளை உலகிற்கு நம்மால் வழிகாட்ட முடியும். அந்த அளவுக்கு நமது விஞ்ஞானிகள் மாபெரும் திறமை படைத்தவர்கள். வரும் காலங்களிலும் நமது ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் சாதனை தொடரட்டும்.

The post தொடரட்டும் சாதனை appeared first on Dinakaran.

Related Stories: