அரவக்குறிச்சி அருகே டூவீலர் மீது லாரி மோதி தாத்தா, பேரன் பரிதாப பலி

அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த பெத்தான்கோட்டையை சேர்ந்தவர் வெங்கடாசலம்(80). இவரது பேரன் ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்தவர் கார்த்திக்(14). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கோடை விடுமுறைக்காக தனது தாத்தா வீட்டுக்கு வந்திருந்தார். இந்நிலையில் அரவக்குறிச்சியில் இருந்து பெத்தான்கோட்டைக்கு இன்று காலை 9.45 மணியளவில் இருசக்கர வாகனத்தில் சென்றனர். இருசக்கர வாகனத்தை கார்த்திக் ஓட்டினார்.
திண்டுக்கல்- கரூர் தேசிய நெடுஞ்சாலை பெத்தான்கோட்டை பிரிவு ரோடு சென்றபோது தூத்துக்குடியில் உள்ள தனியார் கம்பெனியில் இருந்து ஈரோடு பள்ளிபாளையத்தில் உள்ள பேப்பர் மில்லுக்கு சுண்ணாம்பு கல் ஏற்றி சென்ற டாரஸ் லாரி, பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு அந்த இடத்திலேயே வெங்கடாசலம் பலியானார். கார்த்திக் படுகாயமடைந்தார்.

அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று படுகாயமடைந்த கார்த்திக்கை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வெங்கடாசலம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் கார்த்திக் இறந்தார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா வடமங்கலத்தை சேர்ந்த லாரி டிரைவர் பிரபு(35) என்பவரிடம் விசாரித்து வருகின்றனர். லாரி மோதி தாத்தா, பேரன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post அரவக்குறிச்சி அருகே டூவீலர் மீது லாரி மோதி தாத்தா, பேரன் பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: