உளுந்தூர்பேட்டை அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் இன்று சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு: போலீசார் பேச்சுவார்த்தை

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே புகைப்பட்டி கிராமத்தில் ஒரு வார காலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து 100க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் காலி குடத்துடன் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது புகைப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் பைப்லைன் உடைப்பு காரணமாக மெயின்ரோடு அருகில் உள்ள பகுதியில் வசித்து வரும் பொது மக்களுக்கு கடந்த ஒரு வார காலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதுபற்றி அதிகாரி களுக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படி் எனக் கூறி திடீரென இன்று காலை காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் உளுந்தூர்பேட்டை திருக்கோவிலூர் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

உடன் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற எலவனாசூர்கோட்டை காவல் நிலைய போலீசார் மற்றும் உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வினியோகம் செய்யப்படும். பைப் லைன் உடைப்பு சரி செய்யப்பட்டு விரைந்து குடிநீர் வழங்கப்படும் எனக் கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். பொதுமக்களின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தினால் உளுந்தூர்பேட்டை-திருக்கோவிலூர் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

The post உளுந்தூர்பேட்டை அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் இன்று சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு: போலீசார் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Related Stories: