‘மெலனின் தேவதை’

‘இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் அழகே. அழகுக்கான ஒரே விதி, நீங்கள் நீங்களாகவே இருங்கள் என்பதுதான்’ சொல்கிறார் உலகின் டாப் சூப்பர் மாடல் கௌதியா தியோப்.நிறம், உடல், மொழி என எதுவும் இனி அழகைத் தீர்மானிக்காது. காரணம் அழகுக்கு ஆயிரம் கட்டளைகள் உள்ள மாடலிங் உலகமே இன்று பல மாற்றங்களையும், புரட்சிகளையும் பெறத் துவங்கிவிட்டது. அதற்கு மிகப்பெரும் எடுத்துக்காட்டுதான் ‘மெலனின் தேவதை’ எனச் செல்லமாக அழைக்கப்படும் கௌதியா தியோப்.மேலனின் தேவதை, கருப்புத் தங்கம், என உலகமே அழைத்துக்கொண்டிருக்கும் கௌதியாவை சமூக வலைதளங்களில் அடிக்கடிக் காணக் கூடும். ‘தன்னுடைய தோலின் நிறம்தான் தன்னுடைய வரம்’ என்னும் கௌதியா தியோப் ஆரம்ப காலங்களில் தனது நிறத்தாலேயே பல அவமானங்களை சந்தித்திருக்கிறார்.

‘நான் 1996ல் தென்னாப்பிரிக்காவின் செனகலில் பிறந்தேன். எனக்கு இரண்டு வயதாக இருந்தபோது என் அம்மா நியூயார்க்கிற்கு குடிபெயர்ந்தார், அதனால் நான் வீட்டில் என் அத்தையால் வளர்க்கப்பட்டேன். நான் வாழ்வது ஆப்பிரிக்காவாக இருப்பினும் அங்கே இருக்கும் பல பெண்களே தாங்கள் கறுப்பாக இருப்பதை விரும்பவில்லை. செனகலில் 25 சதவீதத்திற்கும் அதிகமான கறுமை நிறமுள்ள பெண்கள் தங்கள் தோலை அடிக்கடி பிளீச் செய்து இருக்கும் நிறத்தைக் காட்டிலும் சற்றே வெளுப்பாக மாறுவதுண்டு’ என்னும் கௌதியா தனக்கு அதில் உடன்பாடில்லை என்கிறார்.

‘நான் என் கறுப்பு நிறத்தை வெளுக்க விரும்பவில்லை, அதற்காக நான் அப்போது கறுப்பாக இருப்பதையே விரும்பினேன் என்றெல்லாம் பொய் சொல்ல மாட்டேன். நான் இயல்பாக இருக்க விரும்பினேன். ஆனால் மக்கள் என்னை அப்படிப் பார்க்கவில்லை. சக நண்பர்கள், பள்ளித் தோழி, தோழர்களே என்னைக் கிண்டலடித்தனர், சிலர் வெறுத்து ஒதுக்கினர். என் சருமத்தின் கறுப்பு நிறம் சதாரண ஆப்பிரிக்கப் பெண்களைக் காட்டிலும் அடர் நிறம் என்பதாலேயே நிறைய கிண்டல்களை சந்திக்க நேரிட்டது. சில வாரங்களுக்கு எனது அறையை விட்டு வெளியே வராமல், அடைந்து கிடந்த நாட்கள் கூட உள்ளன. சில சமயங்களில் பள்ளிக்கே செல்லாமல் வீட்டில் இருந்ததும் உண்டு. ஆனால் என் அக்கா இந்த நிலையிலிருந்து மீண்டு வர நிறைய எனக்கு உதவினாள்.

அவள் உலகின் டாப் மாடலாக ஜொலிக்கும் அலெக் வெக்கின்(உலகின் டாப் மாடல்) படங்களை எனக்குக் காட்டி, “பார்! நீ விரும்பினால் நீ ஒரு மாடலாகக் கூட மாறலாம், முதலில் உனக்கு அதற்கு தன்னம்பிக்கை வேண்டும்’ எனக் கூறி பல கட்டங்களிலும் எனக்கு ஆதரவாக நின்றவர் என் அக்கா.” என்னும் கௌதியா பாரிஸில் இறங்கிய நாள் முதல்தான் தன் அருமை தனக்கே புரிந்தது என்கிறார். ‘எனக்கு 15 வயதாக இருந்தபோது, என் அத்தைக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய பாரிஸ் செல்ல வேண்டியிருந்தது. நானும் என் சகோதரியும் பாரிஸ் செல்ல அங்கேயே அத்தையுடன் செட்டிலாக வேண்டிய சூழல் உருவானது. அவ்வப்போது விடுமுறைக்கு அருகில் இருக்கும் நகரங்களுக்குச்
செல்வதுண்டு.

அப்படி ஒரு நாள் நாங்கள் மிலன் சென்றபோது தெருவில் நடந்து கொண்டிருந்தோம். அங்கே ஒரு பெரிய கண்ணாடியைப் பார்த்தேன். அதில் எங்களைச் சுற்றி நிறைய வெள்ளை நிறத்தவர்கள் இருந்தனர், ஆனால் நான் அத்தனை பேருக்கும் இடையே கறுப்பு நிறத்தில் காட்சியளித்தேன். அந்தத் தருணம் என்னுள் வலிமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. நான் தனித்துவமானவள், பலரும் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு நான் வித்யாசமானவள் என்பதை அன்று உணர்ந்தேன்’ என்னும் கௌதியா இன்று மாடலிங்கில் கொடி கட்டிப் பறக்கும் சூப்பர் மாடல். ‘இன்றுவரை, நான் தினமும் காலையில் முதலில் செய்வது கண்ணாடியில் பார்ப்பதுதான். “உன் தோலைப் பார். பற்களையும் புன்னகையையும் பார். உன் அழகு உனக்குப் புரியவில்லையா? என எனக்கு நானே கேள்விக் கேட்டுக்கொண்டேன். விளைவு என்னை சமூக வலைத்தளத்திற்கு இழுத்து வந்தது. மிகச் சில நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் உலகின் எங்கெங்கோ இருந்து என்னை ஃபாலோ செய்தனர். அதன் விளைவாக பாரிஸில் இருந்தபோது, ​​நான் மாடலிங்கில் ஈடுபடவும் வாய்ப்புக் கிடைத்தது.

கறுப்பு நிறம் ஒன்றும் மோசமல்ல, தனித்துவமானது, அழகானது எல்லாவற்றுக்கும் மேல் ஆரோக்கியமான ஒன்று என்பதை இக்காலப் பெண்களுக்குக் காட்ட விரும்பினேன். இதோ என் நிறம் இன்று எனக்கு வருமானம் ஈட்டிக்கொண்டிருக்கிறது. உலகின் தலைசிறந்த மாடல்களில் ஒருவராகத் திகழ எனக்கு பெரும் துணை புரிவது எந்த நிறம் வேண்டாம் என விரும்பினேனோ அந்த நிறம்தான். 15 வருடங்களுக்கும் மேலாக என் குடும்பத்தைப் பிரிந்து வாழ்ந்தவள் நான். நானே சம்பாதித்து இன்று என் குடும்பத்தையும் ஒன்று சேர்த்து ஒன்றாக வாழ்கிறேன். எனக்கு இப்போது 25 வயது. என் தம்பிக்கு வயது 15 அவரும் பள்ளியில் பல சங்கடமான சூழல்களை தனது நிறத்தால் சந்தித்திருக்கிறார். இன்று அவரும் என்னால் தன்னம்பிக்கையுடன் டீனேஜ் மாடலாக வலம் வருகிறார்’. ‘நம்மை அழகாகக் காட்டுவது நம் நிறமல்ல நமக்குள் இருக்கும் தன்னம்பிக்கையும், நாம் யார் என்பதன் உண்மையும்தான்’ அழுத்தமாகவே சொல்கிறார் இந்த மெலனின் தேவதை கௌதியா தியோப்.

– ஷாலினி நியூட்டன்

The post ‘மெலனின் தேவதை’ appeared first on Dinakaran.

Related Stories: