விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பஞ்சமாதேவி என்ற இடத்தில் தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் வழியாக பண்ருட்டி சென்று நெய்வேலி செல்லும் தனியார் பேருந்து சுமார் 40 பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்தது. இந்த பேருந்தானது விழுப்புரம் மாவட்டம் பஞ்சமாதேவி என்ற இடத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது எதிரே மோட்டார் சைக்கிள் ஒன்று வந்துள்ளது. மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் தவிர்க்க சாலையோரம் இருந்த தடுப்பு கட்டையில் தனியார் பேருந்து மோதியுள்ளது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பேருந்தில் பயணித்த 40 பேரில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விபத்து குறித்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து விபத்தில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post விழுப்புரம் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பேருந்து; 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!! appeared first on Dinakaran.