என்விஎஸ்-01 செயற்கைக்கோளுடன் ‘ஜி.எஸ்.எல்.வி-எப்12’ ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது: ஹரிகோட்டாவில் விரிவான ஏற்பாடு

சென்னை: என்விஎஸ்-01 வழிகாட்டி செயற்கைக்கோளுடன் ‘ஜி.எஸ்.எல்.வி.எப்-12’ ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து, ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-12’ ராக்கெட்டை, இஸ்ரோ இன்று காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவுகிறது. ராக்கெட் 51.7 மீட்டர் உயரமும் 420 டன் உந்துவிசை எடையும் கொண்டது. ஜி.எஸ்.எல்.வி., வரிசையில் இது 15வது ராக்கெட். இதில், வழிகாட்டி சேவையான நாவிக்கின் 2வது தலைமுறை வழிகாட்டி செயற்கைகோள் தொடரமைப்பு விண்ணில் ஏவப்படவுள்ளது. இது 2,232 கிலோ எடை கொண்ட ‘என்.வி.எஸ்.-01’ என்ற வழிகாட்டி செயற்கைக்கோளை புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும்.

இது குறித்து இஸ்ரோ அதிகாரிகள் கூறியதாவது: அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே தங்கள் சொந்த வழிகாட்டி செயற்கைக்கோள் அமைப்புகளைக் கொண்ட நாடுகள். இந்நிலையில் என்விஎஸ்-01 செயற்கைக்கோள் மூலம் இந்தியாவும் தனித்துமான நேவிகேஷன் அமைப்பை பெரும். 2வது தலைமுறை செயற்கைக்கோள்களில் இது முதன்மையானது. அடுத்த தலைமுறைக்கான என்.வி.எஸ். வரிசை செயற்கைக்கோள்கள் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் தகவல்களை தக்கவைத்து மேம்படுத்தும்.

இதில் எல்1, எல்5 மற்றும் எஸ்-பேண்ட் டிரான்ஸ்பாண்டர் உட்பட பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் உள்ளன. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணு கடிகாரமும் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மற்ற செயற்கைக்கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வழி போக்குவரத்தை கண்காணிக்கும். பேரிடர் காலங்களில் துல்லியமான தகவல்களை தெரிவிக்கும். நாவிக் ஏழு செயற்கைக்கோள்கள் மற்றும் 24 மணி நேரம் இயங்கும் தரை நிலையங்களின் வலையமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்மீன் கூட்டத்தின் மூன்று செயற்கைக்கோள்கள் புவிசார் சுற்றுப்பாதையிலும், நான்கு செயற்கைக்கோள்கள் புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையிலும் நிலை நிறுத்தப்படவுள்ளது.

இதற்கான இறுதி கட்டப்பணியான 27.30 மணி நேர ‘கவுன்ட்டவுன்’ நேற்று காலை 7.12 மணிக்கு தொடங்கியது. 3 நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டில் எரிபொருட்கள் நிரப்பப்பட்டு ஏவுதளத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், வழிக்காட்டி செயற்கைக்கோளை சுமந்தபடி செல்லக்கூடிய ‘ஜி.எஸ்.எல்.வி – எப்12’ ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து தயார் நிலையில் இருக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post என்விஎஸ்-01 செயற்கைக்கோளுடன் ‘ஜி.எஸ்.எல்.வி-எப்12’ ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது: ஹரிகோட்டாவில் விரிவான ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: