வேறு பால் நிறுவனங்கள் வரவை பார்த்து பால் உற்பத்தியாளர்கள், மக்கள் அஞ்ச வேண்டாம்: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

சென்னை: வேறு பால் நிறுவனங்களை கண்டு யாரும் அச்சப்படவில்லை. பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எந்த சலசலப்புகளுக்கும் அஞ்ச வேண்டாம் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆவின் 9,763 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களையும், பல லட்சம் பால் உற்பத்தி செய்யும் உறுப்பினர்களையும், சுமார் 35,000 பணியாளர்களையும் கொண்ட பெரிய நிறுவனம். பால் உற்பத்தியாளர்கள் விலையை உயர்த்தி தர வேண்டும் என தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். கழக அரசு பொறுப்பேற்றதின் தொடர்ச்சியாக, லிட்டருக்கு 3 ருபாய் உயர்த்தி வழங்கபட்டுள்ளது.

பால் விற்பனையை பொறுத்தவரையில் வேறு எந்த நிறுவனங்களையும் விட மிக தரமானதாகவும், விலை குறைந்ததாகவும், பொது மக்களுக்கு ஆவின் வழங்கி வருகிறது. கடந்த காலங்களில் ஏற்பட்ட ஒரு சில பிரச்னைகளை சரி செய்ய வேண்டுமென, தமிழக முதல்வரின் உத்தரவின் படி பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றது. குறிப்பாக, நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. வேறு நிறுவனங்கள் எதையும் கண்டு யாரும் அச்சப்படவில்லை. ஆனால், பொதுவாக ஒரு மாநிலத்தின் பால் உற்பத்தி பகுதியில் இன்னொரு மாநிலத்தின் பால் உற்பத்தி நிறுவனம் தலையியிடுவதில்லை. எனவேதான் தமிழக முதல்வர், ஒன்றிய அரசுக்கு தமிழகத்தின் பால் உற்பத்தி பகுதியில் வேறு மாநிலங்களை சேர்ந்த நிறுவனங்களை அனுமதிக்க வேண்டாம் என கடிதம் எழுதினார்.

அதே நேரத்தில் தமிழகத்தில் பால் உற்பத்தியை பெருக்கவும், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கால்நடைகளின் நலனை பேணவும், பால் கையாளும் திறனை அதிகரிக்கவும் உரிய அறிவுரைகளை தந்துள்ளார்கள். அவற்றை தீவிரமாக நடைமுறைப் படுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. எனவே எந்த விதத்திலும் பால் உற்பத்தியாளர்கள் நலன் மற்றும் ஆவின் வாடிக்கையாளர்களான பொதுமக்களின் நலன் என இரண்டிலும் எந்த பிரச்னையும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை இந்த அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த சூழ்நிலையில் யாரும் எந்த சலசலப்புக்கும் அஞ்ச வேண்டாம். ஆவின் நிறுவனம் தொடர்ந்து பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலையை உற்பத்தி செலவை கணக்கில் கொண்டு வழங்குவதற்கும் அவர்கள் நலனை பாதுகாப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துகொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post வேறு பால் நிறுவனங்கள் வரவை பார்த்து பால் உற்பத்தியாளர்கள், மக்கள் அஞ்ச வேண்டாம்: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: