சேலம்காரர் சோகத்தில் மூழ்கிய கதையை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘அரசியல்ல நிரந்தர நண்பன் என்று ஒருவர் கூட இருக்க முடியாது என்பதை சொல்லி சேலம்காரர் புலம்புறாராமே. ஏன் இந்த நிலை…’’ என்று விசாரித்தார் பீட்டர் மாமா.‘‘இலைக்கட்சியை தன் ைகயில் வைத்துள்ள சேலத்துக்காரர் மிகுந்த மனச்சோர்வுடன் உள்ளாராம். மனம் விட்டு பேசி சிரிக்கக்கூட ஒரு நல்ல நண்பன் கிடைக்கலையே என்ற பெரும் குறை அவரது மனசை வாட்டி வதைக்கிறதாம். காரணம் மனதில் உள்ளதை கொட்டி மனக்காயத்தை ஆற்றலாம்னு நினைக்கிறாராம். ஆனால், அப்படி ஒரு நண்பன் கிடைக்கவில்லையாம். நம்பிக்கை பிறக்கவில்லையாம். நாம அதிகாரமுள்ள அரசு பதவியில இருக்கும்போது நம்முடன் ஒட்டிக்கிட்டிருந்தவர்கள் எல்லாம் இப்போ எங்கே போனாங்க என்று யோசிக்கும் அளவுக்கு ஒரு போன் கால் கூட இல்லையாம். நலம் விசாரிப்பு இல்லையாம்.. அரசியல் விவாதங்கள் இல்லையாம். என் இதயத்துக்கு நெருக்கமான நண்பர் என வெளிப்படையாக கூறிக்கிட்டிருந்த நிழல் மேலேயும் நம்பிக்கை இழந்திட்டாராம். கட்சியின் பொதுச் செயலாளர் ஆனாலும் நல்ல ஆலோசனைகள் சொல்லி பக்கபலமா இருக்க ஆள் இல்லையாம். இதனால்தான், தன் மன ஆறுதலுக்காக மீண்டும் தொண்டர்களை நோக்கி போக முடிவு செய்துள்ளாராம். சொந்த ஊரைச் சுற்றியிருக்கும் சாதாரண தொண்டர்களின் இறப்புக்கு போய் ஆறுதல் சொன்னாராம்.

அதன் பிறகு தான் கொஞ்சம் மனசு நிம்மதி அடைஞ்சதா இலையின் அடிப்பொடிகள் பேசிக்கிறாங்க. அதே நேரத்துல கால்வலிக்காக ஒரு பத்து நாளு சிகிச்சை பெற திட்டம் இருக்காம். அதுவும் தேனிக்காரர் போல கேரளா போகும் ஐடியா இல்லையாம். எதுவா இருந்தாலும் நெடுஞ்சாலை நகர் வீட்டில்தான் நடக்குமாம் என்பதில் உறுதியா இருக்காராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ டெல்டாவில் முகாமிட்ட சின்னமம்மி திடீர் விசிட் குறித்து விசாரிக்க சேலத்துக்காரர் என்ன உத்தரவு போட்டாராம்…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘மனுநீதிசோழன் மாவட்டத்தில் இலைகட்சி நிர்வாகி இல்ல திருமணத்தில் பங்கேற்ற சின்னமம்மி, தலைநகரம் செல்லாமல் நெற்களஞ்சியம், மனுநீதி சோழன், கடலோர மாவட்டங்களில் திடீர் விசிட் அடித்தாராம். தொடர்ந்து டெல்டா மாவட்டத்தில் முகாமிட்டு இருந்த சின்னமம்மி, தனது ஆதரவாளர்களை தனித்தனியா சந்தித்து நலம் விசாரித்துள்ளார். சேலம்காரர் மற்றும் தேனிக்காரர் ஆதரவாளர்களான நெருங்கிய முக்கிய நிர்வாகிகள் பற்றியும், அவர்களது அரசியல் மூவ் எப்படி இருக்கிறது என்பது வரை அனைத்து தகவல்களையும் சேகரித்துள்ளார். டெல்டா மாவட்டத்தில் சேலம்காரர் மீது அதிருப்தியில் உள்ள 2வது கட்ட நிர்வாகிகள் தனித்தனியாக சின்னமம்மியை ரகசியமாக சந்தித்து பேசியுள்ளனர். இந்த தகவல் வெளியில் கசிந்ததால் சேலம்காரர் கவனத்துக்கு அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் கொண்டு சென்றனர்.

இதனால் உச்சகட்ட டென்ஷனில் உள்ள சேலம்காரர், டெல்டா மாவட்டத்தில் சின்னமம்மி எதற்காக முகாமிட்டு இருந்தார். அவர் எங்கெல்லாம் சென்றார். யார், யாரையெல்லாம் சந்தித்து பேசினார். சின்னம்மியை ரகசியமா சந்தித்த 2வது கட்ட நிர்வாகிகள் யார், யார் என உள்ளிட்ட விவரங்களை சேரிக்கும்படி அவரது டீமுக்கு சேலம்காரர் ரகசிய உத்தரவு போட்டுள்ளாராம். கடலோர மாவட்டத்தில் தங்கியிருந்த சின்னமம்மி திடீரென ‘‘பிரஸ் மீட்’’ ஏன் கொடுத்தார். டெல்டா மாவட்டத்தில் சின்னமம்மி திடீரென விசிட் அடித்ததற்கான உண்மையான காரணத்தை கண்டறியும் முயற்சியில் சேலம்காரர் டீம் தற்போது திரைமறைவு வேலையில் இறங்கியுள்ளதாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மின்வாரிய அதிகாரிக்கே ஷாக் கொடுக்கும் அளவுக்கு.. எதிர்ப்பு பேனரை வைத்தது பற்றி சொல்லேன்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘குமரி மாவட்டத்தில் மின் வாரிய உயர் அதிகாரி ஒருவருக்கு எதிரா ஆளும் தொழிற்சங்கமே ஆங்காங்கே பிளக்ஸ் போர்டுகள் வைத்துள்ளார்களாம். 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் சேர்ந்த நாள் முதல் குமரி மாவட்டத்தில் தான் அந்த அதிகாரி பணியில் உள்ளாராம். மாஸ் ரெய்டு என்ற பெயரில் தகுதி இல்லாத பணியாளர்களை ஆய்வுக்கு அனுப்பி, சம்பந்தமில்லாமல் அபராதம் விதிக்க வைத்து அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துகிறார் என்பது உள்பட 23 புகார்களை அந்த அதிகாரி மீது சொல்கிறார்கள். அதிகாரிக்கு எதிராக ஆளுங்கட்சி தொழிற்சங்கமே பொங்கி எழுந்திருப்பது தான் இதில் மிகப்பெரிய டிவிஸ்ட். இதை தான் அங்குள்ள மின் வாரியர்கள் மத்தியில் பேச்சாக இருக்காம். கண்டன பிளக்ஸ் போர்டு விவகாரம் அமைச்சரு வரை போய் இருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘உறுப்பினர் சேர்க்கையில ஏன் இலைக்கட்சி நிர்வாகிகள் அப்செட் ஆனாங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஜெ.வுக்கு பிறகு இலைக்கட்சி 4 அணிகளாக சிதறி கிடக்கிறது. இதுல சேலம்காரர், தேனிக்காரர், குக்கர், சின்னமம்மி என தனித்தனியாக பிரிந்து, யார் பலமாக இருக்காங்க என்பதை நிரூபிக்க தீவிரம் காட்டிட்டு வர்றாங்க. தற்போது இலைக்கட்சி பொதுச்செயலாளரா உள்ள சேலம்காரர், மாநிலத்துல 50 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்கனும்னு சொல்லிட்டாராம். இதுக்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு டார்கெட்டாம். இதனால கட்சி நிர்வாகிகள் உறுப்பினர் சேர்க்கையில தீவிரமா ஈடுபட்டு இருக்காங்களாம். ஆனா குயின்பேட்டை, மிஸ்டர் பத்தூர், வெயிலூர் மாவட்டங்கள்ல பொதுமக்களை நிர்வாகிங்க சந்திக்கும்போது, நீங்க எந்த அணி அப்படின்னு கேட்குறாங்க. மேலும் இலைக்கட்சியில உறுப்பினரா சேர மறுக்கிறார்களாம். இதுனால அப்செட் ஆகியுள்ள நிர்வாகிங்க சேலம்காரரை தேர்தல் ஆணையம் அங்கீகரிச்சாலும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்துல அவருக்கு போதிய வரவேற்பு இல்லையாம். இப்படி இருந்தா எப்படி உறுப்பினர்களை சேர்குறதுன்னு வேதனையில தவிக்குறாங்க இலை கட்சியினர்… என்றார் விக்கியானந்தா.

The post சேலம்காரர் சோகத்தில் மூழ்கிய கதையை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Related Stories: