ஆன்ட்ராய்ட் யுகத்திலும் முகம் தெரியாத அன்பு: வாழ்க்கையின் கடைசி பயணத்தை நெகிழ வைக்கும் வியாபாரி

விருதுநகர்: உறவுகள், நட்புகளின் இழப்பு என்றால் கட்டாயம் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்துவது நமது மரபு. அதுபோல் நள்ளிரவு நேரங்களில் துக்க நிகழ்வுகளுக்கு செல்லும் பலரது தவிப்பு, இறந்த உறவுக்கு அஞ்சலி செலுத்த மாலை எங்கே வாங்குவது என்பதுதான். இதுபோன்று தவிப்போரின் உளமறிந்து அவர்களுக்காக நாள்தோறும் இரவில் தனது கடையின் முகப்பில் மாலைகளை தொங்கவிட்டு செல்கிறார் ஒரு பூ வியாபாரி. விருதுநகர் அக்ரஹாரம் தெருவில் பூக்கடை வைத்துள்ளவர் துரைப்பாண்டி (64). இவர் தினந்தோறும் வியாபாரம் முடிந்து வீட்டிற்கு செல்லும் போது, 2 முதல் 4 மாலைகளை தனது கடை வாசலில் தொங்கவிட்டு செல்கிறார். மறுநாள் காலை வரும்போது, மாலை காணாமல் போயிருந்தால் இறந்தவர் யாருக்கோ போய் சேர்ந்திருக்கிறது என்று புரிந்து கொள்வார். மாலைகள் கடையில் தொங்கினால், முந்தைய தின இரவில் ஏதும் உயிரிழப்பு இல்லை என்ற மனநிறைவுடன் வியாபாரத்தை தொடங்குகிறார். இவரது மனிதநேயத்தை பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து துரைப்பாண்டி கூறும்போது, “ஒருமுறை பேருந்தில் பயணிக்கும்போது இதைச் சொல்லி எனது நண்பர்கள் வருத்தப்பட்டனர். அது என் ஆழ்மனதை பாதித்தது. அன்றிலிருந்து இதை சேவையாக செய்து வருகிறேன். இரவில் மாலையை எடுத்துச் சென்றவர்களில் ஒரு சிலர், மறுநாள் காலையில் வந்து பணம் கொடுத்தால் நான் வாங்குவதில்லை. இந்த மண்ணை விட்டு பிரியும் ஏதோ ஒரு ஆன்மாவிற்கு எனது பூ மாலையால் அஞ்சலி செலுத்தப்பட்டது என்பதே எனக்கு மனநிறைவை தருகிறது’’ என்கிறார். ஆண்ட்ராய்டு போனுக்குள் மூழ்கி, அடுத்தவர் முகத்தைக் கூட பார்க்காமல் வாழும் இந்த காலத்தில், முன்பின் முகம் தெரியாதவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, தினமும் மாலையை தொங்க விட்டுச் செல்லும் பூ வியாபாரியின் பண்பு, நமக்கு மனிதநேயத்தை போதிக்கிறது.

The post ஆன்ட்ராய்ட் யுகத்திலும் முகம் தெரியாத அன்பு: வாழ்க்கையின் கடைசி பயணத்தை நெகிழ வைக்கும் வியாபாரி appeared first on Dinakaran.

Related Stories: