டெல் நிறுவனத்தை ரூ.50 கோடிக்கு தாரைவார்த்த அதிமுக அரசு: ஒன்றிய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் கம்பெனி கையகப்படுத்தியது

* அடுத்த மாதம் உற்பத்தி தொடங்கும் நிலையில் வெளிமாநிலத்தவர்களுக்கே வேலைவாய்ப்பு

* இந்தியாவிலேயே மாநில அரசால் நடத்தப்பட்ட ஒரே வெடிமருந்து தொழிற்சாலை

பின்தங்கிய மாவட்டமான பழைய வட ஆற்காடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு- ஆந்திர மாநில எல்லையில் காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டையில் பனமடங்கி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தமிழ்நாடு தொழில் வெடிமருந்து நிறுவனம் 700 ஏக்கர் பரப்பளவில் கடந்த 1983ல் தொடங்கப்பட்டது. இந்தியாவில், மாநில அரசால் நடத்தப்படும் ஒரே வெடி மருந்து நிறுவனமாக, தமிழ்நாடு தொழில் வெடி மருந்து (டெல்) நிறுவனம் 1986ல் உற்பத்தியை தொடங்கியது. இங்கு சாலை மேம்பாட்டுப் பணிகள், கால்வாய் வெட்டுதல், கிணறு தோண்டுதல், கல்குவாரி, சுரங்கத் தொழிலுக்கு பயன்படும் வெடிமருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டன.
துவக்கத்தில், நைட்ரோ கிளிசரின் வகை வெடி மருந்துகளை உற்பத்தி செய்தது. பின், கலவை வெடி மருந்துகள், டெட்டனேட்டர்கள், டெட்டனேட்டர் ஒயர்கள், வெடியூக்கி, வெடிதிரி, எமல்ஷன் வெடிமருந்து, ஸ்லரி வெடிமருந்துகள், ராணுவம் தொடர்பான வெடிமருந்துகள் உற்பத்தியில் களம் இறங்கியது. ‘நைட்ரோ கிளிசரின்’ வெடிமருந்துகள், ஓராண்டு வரை சேமித்து வைத்து, சுரங்கம், கல்குவாரி போன்ற அனைத்து தொழில்களுக்கும் பயன்படுத்தக்கூடியது. நைட்ரோ கிளிசரின், அம்மோனியம் நைட்ரேட் போன்ற வெடிபொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதில் முன்னணி நிறுவனமாக டெல் நிறுவனம் திகழ்ந்ததை வெடிமருந்து விற்பனை குறித்த தகவல்களை கண்காணிக்கும் பெசோ அமைப்பின் பதிவேடுகள் தெரிவிக்கின்றன. இந்நிறுவனம்தான் வெடிமருந்து விற்பனையை கட்டுப்படுத்தி கண்காணித்து வருகிறது.

இந்நிறுவனம் உற்பத்தியை தொடங்கிய 1986ல் இங்கு 1500 பேர் பணியாற்றினர். ஆரம்பத்தில் லாபத்தில் நடைபோட்ட இந்நிறுவனம், பின்னர் நஷ்டத்தில் இயங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதற்கு நைட்ரோ கிளிசரின் உற்பத்திக்கு ஒன்றிய அரசு போட்ட தடை முக்கிய காரணமாக அமைந்தது. கடந்த 15 ஆண்டுகளில் இந்நிறுவனம் படிப்படியாக நஷ்டத்தை நோக்கி சென்றது. இதையடுத்து விஆர்எஸ் முறையில் தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டனர். கடந்த 2017 அக்டோபர் 1ம் தேதி டெல் நிறுவனம் மூடப்பட்டது. பின்னர், டெல் நிறுவனத்தை ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகத்தின் அருவங்காடு ராணுவ தொழிற்சாலை அதிகாரிகள் வந்து பார்வையிட்டு, அதை தங்கள் வசம் எடுப்பதற்கான பேச்சுவார்த்தையை தமிழ்நாடு அரசுடன் தொடங்கினர். இதில், இழுபறி ஏற்பட்டதால், டெல் நிறுவனத்தை அருவங்காடு ராணுவ தொழிற்சாலை நிர்வாகம் கையில் எடுக்கும் திட்டம் அப்படியே முடங்கி போனது. பின்னர், ஆவின் நிறுவனம் வசம் டெல் நிறுவனத்தை ஒப்படைக்கும் திட்டமும் பரிசீலிக்கப்பட்டு நின்று போனது.

இந்த சூழலில், ஒன்றிய பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் (பிஇஎல்), டெல் நிறுவனத்தை குத்தகைக்கு எடுத்து நடத்த தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் கடந்த 2018 செப்டம்பர் 26ம் தேதி தமிழ்நாடு அரசுடன் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி, டெல் நிறுவனத்தைரூ.50 கோடி முதலீட்டில் அப்படியே குத்தகைக்கு எடுத்து நடத்த பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் முடிவு செய்தது. அதற்கான அனைத்து நடைமுறைகளும் முடிந்து காட்பாடி டெல் நிறுவனம் பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் வசம் வந்தது. இதையடுத்து பழைய டெல் நிறுவனத்தின் பெயர் பலகை மாற்றப்பட்டு பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டது. தொடர்ந்து சிறிய அளவில் பராமரிப்புப்பணிகள், புதிய இயந்திரங்கள் அமைத்தல் போன்ற பணிகள் முடிந்த நிலையில், அடுத்த மாதம் தனது முறையான உற்பத்தியை தொடங்குவதாக பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிறுவனம் ராணுவத்துக்கு தேவையான ஏவுகணைகளை பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தயாரித்து, காட்பாடியில் வெடிமருந்தை நிரப்பி புனேவுக்கு அனுப்பி வைக்கும். அதன்படி, இங்கு 340 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதில் ஏற்கனவே டெல் வெடிமருந்து தொழிற்சாலையில் பணியாற்றி விஆர்எஸ் பெற்றுச் சென்றவர்களில் உடல் உழைப்பு மற்றும் தொழில்நுட்ப தகுதியுடன் உள்ளவர்களுக்கும், விஆர்எஸ் பெற்றுச் சென்ற தொழிலாளர்களின் தகுதிவாய்ந்த வாரிசுகளுக்கும், உள்ளூர் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. ஆனால், தொழிற்சாலை பாதுகாப்புப்பணிக்காக 30 முன்னாள் படைவீரர்களுக்கும், பழைய டெல் நிறுவனத்தை சேர்ந்த 5 பேருக்கும் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தொழிற்சாலையின் மற்ற உற்பத்தி பிரிவு, நிர்வாக பிரிவு உட்பட பல பிரிவுகளில் கர்நாடகம் உட்பட வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களே நிறைந்துள்ளனர். இந்த ஏற்றத்தாழ்வை போக்கவும், அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்கும் வகையில் மிகப்பெரிய வாய்ப்பாக டெல் நிறுவனத்தை கையில் எடுத்துள்ள பிஇஎல் நிறுவனம் தனது உற்பத்தித்திறனை அதிகரித்து, தகுதியான உள்ளூர் (தமிழ்நாடு) இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க ேவண்டும் என்று முன்னாள் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

* பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் வரலாறு

ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் 1954ம் ஆண்டு தொடங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் என்ற பெல் நிறுவனம் பெங்களூருவில் அமைந்துள்ளது. சென்னை, காசியாபாத், புனே, மசூலிப்பட்டினம், பஞ்ச்குலா, கோட்துலா, ஐதராபாத், நவிமும்பை ஆகிய இடங்களில் தொழிற்சாலைகளை கொண்டுள்ளது. இவ்வாறு மொத்தம் 9 உற்பத்தி கூடங்களுடன் போர் விமானங்களுக்கு தேவையான உபகரணங்கள், ரேடார் சாதனங்கள், ஆயுத தளவாடங்கள், மின்னணு வாக்கு இயந்திரங்களை உற்பத்தி செய்கிறது.

* ஒவ்வொரு தொழிலாளிக்கும்ரூ.2.50 லட்சம் பாக்கி

2017ல் கட்டாய விஆர்எஸ் கொடுத்து அனுப்பப்பட்ட தொழிலாளர்களுக்கு அவர்களின் பணிக்காலம் 2 ஆண்டுகள் இருந்தால்ரூ.1.50 லட்சமும், 2 ஆண்டுகளுக்கு மேல் இருந்தால்ரூ.5 லட்சமும் வழங்கப்பட்டது. இதுதவிர தொழிலாளர்களின் மாற்றியமைக்கப்பட்ட அகவிலைப்படி மற்றும் திரும்ப பெறக்கூடிய மருத்துவ அலவன்ஸ் என்று ஒவ்வொரு தொழிலாளிக்கும்ரூ.2.50 லட்சம் வரை பாக்கி உள்ளது. இது மொத்தமாகரூ.5 கோடி வரை வரும் என்று தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

* டெல் நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டது எப்படி?

கடந்த 2003ல் அப்போதைய ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு, திருப்பதி ஏழுமலையான் ேகாயிலுக்கு காரில் சென்றபோது, நக்சலைட் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் அதிர்ஷ்டவசமாக அவர் தப்பினாலும், இந்த தாக்குதலில் நைட்ரோ கிளிசரின் வெடிமருந்துதான் பயன்படுத்தப்பட்டது என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஒன்றிய அரசு, 2004 முதல் நைட்ரோ கிளிசரின் வகை வெடிமருந்து உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டை தடை செய்தது. அப்போது, நாடு முழுவதும், ‘நைட்ரோ கிளிசரின்’ வெடிமருந்து தயாரிப்பில், ‘டெல்’ நிறுவனத்துடன் சேர்த்து, 4 நிறுவனங்கள் மட்டுமே ஈடுபட்டிருந்தன. டெல் நிறுவனத்தின், மொத்த விற்பனையில், 75 சதவீத வருவாய் நைட்ரோ கிளிசரின் வகை வெடிமருந்து மூலம் கிடைத்து வந்தது. ஒன்றிய அரசின் தடையை அடுத்து, நிறுவனத்தின் வெடிமருந்து விற்பனை சரியத் தொடங்கியது. ஆகவே, இதை மீண்டும் தயாரிக்க ஒன்றிய அரசின் அனுமதி கேட்டு டெல் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பும், டெல் நிர்வாகமும் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்தும் ஏற்கப்படவில்லை. இதனால் நைட்ரோ கிளிசரினுக்கு மாற்றாக, எமல்ஷன் வகை வெடிமருந்துகள் தயாரிக்கப்பட்டன. இவ்வகை வெடிமருந்து தயாரிப்பில், தற்போது நாடு முழுவதும், 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதனால், வெடிமருந்து தொழிலில் ஏற்பட்ட கடும் போட்டியில் டெல் நிறுவனம் பின்னடைவை சந்தித்தது.

The post டெல் நிறுவனத்தை ரூ.50 கோடிக்கு தாரைவார்த்த அதிமுக அரசு: ஒன்றிய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் கம்பெனி கையகப்படுத்தியது appeared first on Dinakaran.

Related Stories: