வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஊழியர் தற்கொலையில் திடீர் திருப்பம்: போலீசார் தகவல்

கூடுவாஞ்சேரி: வண்டலூர் உயிரியல் பூங்காவின் குடியிருப்பில் வசித்து வந்த ஊழியர் ஒருவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது உயர் அதிகாரிகளின் டார்ச்சர் காரணமாக ஊழியர் தற்கொலை செய்து கொண்டதாக கடிதத்தில் இருப்பதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து, திடீர் திருப்பமாக தனது சாவுக்கு யாரும் காரணமல்ல என ஊழியர் கடிதம் எழுதி வைத்திருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.

சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தவர் ரமேஷ் (60). இவர் இன்னும் 3 நாட்களில் ஓய்வுபெறவிருந்தார். இவருக்கு மனைவி லதா (55), ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர் குடியிருப்பில் ரமேஷ் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்துடன் ரமேஷ் வீட்டில் தூங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து நேற்று காலை குடும்பத்தினர் எழுந்து பார்த்தபோது, படுக்கையறையில் ரமேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் ஓட்டேரி போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். மேலும், வீட்டுக்குள் ரமேஷ் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினர். அக்கடிதத்தில் ‘வண்டலூர் உயிரியல் பூங்கா உயர் அதிகாரிகளின் டார்ச்சர் காரணமாக ஊழியர் ரமேஷ் தற்கொலை செய்து கொள்வதாக’ குறிப்பிட்டிருந்ததாக செய்திகள் வெளியாகின. ரமேஷின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இப்புகாரின்பேரில் ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடிதத்தை ஆய்வு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் எலக்ட்ரிஷியனாக வேலை பார்த்த ரமேஷ், நேற்று தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதிய கடிதத்தில், உயர் அதிகாரியின் டார்ச்சரால் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிடவில்லை. அதில், என் சாவுக்கு யாரும் காரணமல்ல என்றே குறிப்பிட்டு இருந்ததாக தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸ் தரப்பினர் கூறுகையில்:
வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதற்கு அதிகாரிகள் யாரும் காரணம் இல்லை. அவர் எழுதி வைத்த கடிதத்தில், என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது என்று தெரிவித்தனர். மேலும் உயிரியல் பூங்கா நிர்வாகிகளிடம் கேட்டதற்கு, வண்டலூர் உயிரியல் பூங்காவில் ரவி என்ற ரேஞ்சரே கிடையாது.

ரமேஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துக்கும் பூங்கா உயர் அதிகாரிகளுக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது. இதில், பூங்கா உயர் அதிகாரிகளுக்கு அவப்பெயர் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே, யாரோ வதந்தி பரப்பி விட்டுள்ளனர் என்றனர். இதனால் வண்டலூர் பூங்கா ஊழியர் தற்கொலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஓட்டேரி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

The post வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஊழியர் தற்கொலையில் திடீர் திருப்பம்: போலீசார் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: