சுற்றுலா பயணிகள் குவிந்தனர்: கொடைக்கானல் மலர் கண்காட்சி மேலும் 2 நாள் நீட்டிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் மலர்கண்காட்சி மேலும் 2 நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினமான இன்று பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஆண்டுதோறும் மலர்கண்காட்சி மற்றும் கோடைவிழா வெகு சிறப்பாக நடத்தப்படும். கடந்த ஆண்டு மலர்கண்காட்சி 5 நாள் நடத்தப்பட்டது. இந்தாண்டு 3 நாள் நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த 26ம் தேதி 60வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா தொடங்கியது.

மலர் கண்காட்சியில் 34 வகையான ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான பல வண்ண மலர்கள் இடம் பெற்றுள்ளன. பல வண்ண மலர்களை கொண்டு ஒட்டகச்சிவிங்கி, வாத்து, டெடி பியர், டோனி டீசர்ட் உள்ளிட்ட உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காய்கறிகளில் காட்டு மாடு, வரிக்குதிரை, மயில், அணில் போன்ற உருவங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

விடுமுறை தினமான இன்றும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால், இன்றுடன் நிறைவடைய இருந்த மலர்கண்காட்சி மேலும் 2 நாள் (மே 30) நீட்டிக்கப்பட்டுள்ளது என தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பெருமாள்சாமி தெரிவித்துள்ளார். கோடை விழா வரும் 2ம் தேதி வரை நடக்கிறது. இதில் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

The post சுற்றுலா பயணிகள் குவிந்தனர்: கொடைக்கானல் மலர் கண்காட்சி மேலும் 2 நாள் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: